இலக்கை மிஞ்சி வழங்கப்பட்ட போஸ்ட் - மெட்ரிக் ஸ்காலர்ஷிப்
இலக்கை மிஞ்சி வழங்கப்பட்ட போஸ்ட் - மெட்ரிக் ஸ்காலர்ஷிப்
UPDATED : ஜன 13, 2011 12:00 AM
ADDED : ஜன 13, 2011 12:20 PM
சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்படும் போஸ்ட் - மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தில், நிர்ணயிக்கப்பட்ட மாணவர் எண்ணிக்கையை விட, அதிகளவிலான மாணவர்களுக்கு அந்த உதவித்தொகையை, மத்திய சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகம் வழங்கியுள்ளது.
சிறுபான்மை இன மாணவர்களுக்கு 11 ம் வகுப்பு முதல் பிஎச்.டி. படிப்பு வரை போஸ்ட் - மெட்ரிக் ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு 2010-11 ஆண்டுக்காக 4 லட்சம் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கடந்த 2010 , டிசம்பர் 31 ம் தேதியே 4.2 லட்சம் மாணவர்களுக்கு உதவித்தொகைகள் வழங்கப்பட்டு விட்டன. இதன் மொத்த மதிப்பு ரூ.184.24 கோடி. கடந்த கல்வியாண்டில் மொத்தம் 3.87 லட்சம் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட்டது. ஆனால் இதுவும் நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிகம்தான்.
சிறுபான்மை மாணவர்களுக்கான இந்த திட்டம் கடந்த 2007, டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. முழுக்க முழுக்க மத்திய அரசு நிதியின் மூலம் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மூலம் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் போஸ்ட் - மெட்ரிக் உதவித்தொகையைப் பெற, ஒவ்வொரு மாணவரும் முந்தைய ஆண்டு இறுதித் தேர்வில் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அதேசமயம் மாணவரது பெற்றோர் வருமானமும் வருடத்திற்கு ரூ. 2 லட்சத்தை தாண்டாமல் இருக்க வேண்டும்.
