UPDATED : ஜன 14, 2011 12:00 AM
ADDED : ஜன 17, 2011 11:17 AM
கேட், மேட், சாட்(எக்ஸ்.ஏ.டி) மற்றும் மாநில அளவிலான தேர்வுகள் போன்ற பலவித தேர்வுகளின் மூலமாக ஒரு வருடத்தில் 4 லட்சம் மாணவர்கள் நாடு முழுவதும் எம்.பி.ஏ. படிப்பில் சேர முடியும். ஆனால் அனைவரும் விரும்பும் புகழ்பெற்ற வணிகப் பள்ளிகளில் மொத்தம் 10 ஆயிரத்திற்கும் குறைவான இடங்களே உள்ளன. இதனால் பல மாணவர்கள் ஏமாற்றமடைகின்றனர். புகழ்பெற்ற வணிகப் பள்ளிகளில் இடம் கிடைக்காமல் ஏமாற்றமடைந்த மாணவர்கள், எப்படி சிறந்த முறையில் தங்களின் எம்.பி.ஏ. படிப்பை மேற்கொள்ளலாம் என்று ஆலோசனை கூறுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
நாட்டில் மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிகப் பள்ளிகள் இருக்கின்றன. அவற்றில் 700 க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை தரமற்றதாக ஒதுக்கினாலும், சுமார் 200௦௦ க்கும் மேற்பட்ட வணிகப் பள்ளிகள் எஞ்சியுள்ளன. எனவே இவற்றில் தனக்கு பொருத்தமானதை மேற்கூறிய மாணவர் தேர்வு செய்யலாம். இத்தகைய வணிகப் பள்ளிகளில் உள்ள மொத்தம் 15000௦௦௦ எம்.பி.ஏ. இடங்கள், மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை. இப்போது இந்த வரையறுக்கப்பட்ட வணிகப் பள்ளிகள், புகழ்பெற்ற வணிகப் பள்ளிகளுக்கு சமமாக கருதப்பட வேண்டியவை. ஆனால் பல மாணவர்கள், பலவித காரணங்களுக்காக வணிகப் பள்ளிகளின் தரத்தைப் பற்றி கவலைப்படாமலேயே, அவற்றில் எம்.பி.ஏ. சேர்கின்றனர். எது எப்படியிருந்தாலும், ஒரு வணிகப் பள்ளியில் எம்.பி.ஏ. சேர்வதற்கு முன்னர், கீழ்கண்ட அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
வேலை வாய்ப்பு சாதகம்:
பெரும்பாலான மாணவர்கள் தங்களுக்கு சிறப்பான வேலை கிடைக்க வேண்டும் என்ற ஆவலில்தான் நல்ல வணிகப் பள்ளியில் போய் சேர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். எனவே நீங்கள் ஒரு வணிகப் பள்ளியில் சேர்வதற்கு முடிவெடுக்கும் முன்பாக, அக்கல்வி நிறுவனத்தின் வேலை வாய்ப்பு வரலாறுகளைப் பற்றி நன்கு விசாரிக்க வேண்டும். உங்களுக்கு முன்னர் படித்த சீனியரையோ அல்லது பழைய மாணவரையோ இந்த விஷயத்தில் பயன்படுத்தலாம்.
ஏனெனில் சில கல்வி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு சாதகங்கள் மற்றும் சம்பளம் பற்றி பொய்யான பரப்புரைகள் இருக்கலாம். எனவே கீழ்கண்ட கேள்விகளை நீங்கள் கேட்கலாம்.
* கடந்த வருடம் எத்தனை நிறுவனங்கள் இக்கல்வி நிறுவன மாணவர்களுக்கு வேலை கொடுத்தன?
* எத்தனை வேலைகள் மொத்தமாக கொடுக்கப்பட்டன?
* எத்தனை சதவீத மாணவர்கள் பணியமர்த்தப்பட்டார்கள்?
* கல்வி நிறுவனத்தின் முதல் 10 சிறந்த மாணவர்கள், எப்படியான வேலையையும், சம்பளத்தையும் பெற்றனர்?
இத்தகைய கேள்விகளில் உங்களுக்கு திருப்தியான பதில்கள் கிடைக்கவில்லை எனில், நன்கு யோசித்து செயல்பட வேண்டும். ஆனால் படித்து முடித்து தங்களின் சொந்த குடும்ப தொழிலுக்கு செல்லும் வாய்ப்புள்ள அல்லது செல்ல விரும்பும் மாணவர்கள், மேலே சொன்ன விஷயங்களைப் பற்றி அதிகம் யோசிக்க வேண்டியதில்லை.
கல்வி கட்டணம்:
புகழ்பெற்ற வணிகப் பள்ளிகளில் இடம் கிடைக்காமல், சாதாரணமான கல்வி நிறுவனங்களில் சேர்ந்தால், அங்கு கல்வி கட்டணம் குறைவாக இருக்கும் என்று அர்த்தமல்ல. எம்.பி.ஏ. படிப்பிற்காக வணிகப் பள்ளிகள் பலவிதமான கட்டணங்களை வசூலிக்கின்றன. ௨ வருட எம்.பி.ஏ. படிப்பிற்கு சராசரியாக ௫ முதல் ௭ லட்சம் வரை கட்டணம் வசூலிக்கும் வணிகப் பள்ளிகள் கருத்தில் கொள்ளத்தக்கவை.
பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் வணிகப் பள்ளிகள் ஓரளவு நியாயமான கட்டணத்தை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கலாம். எனவே அதுபோன்ற வணிகப் பள்ளிகளில் இடம்பெற முயற்சி செய்ய வேண்டும்.
உள்கட்டமைப்பு வசதிகள்:
புகழ்பெற்ற வணிகப் பள்ளியில் சேர முடியாமல், ஓரளவு பெயர்பெற்ற வணிகப் பள்ளிகளில் சேர்பவர்கள், உடனே இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்துவிடக் கூடாது. தாங்கள் சேரும் வணிகப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி முக்கியமாக ஆராய வேண்டும். கட்டிடம், விடுதிகள், உணவகம், நூலகம் போன்றவை தரமாக உள்ளனவா என்று பார்க்க வேண்டும். மேலும் அக்கல்வி நிறுவனத்தில் உள்ள ஆசிரியர்களின் தரம் மற்றும் எத்தனை பேர் முழுநேர ஆசிரியர்களாக உள்ளனர் என்பதைப் பற்றியும் விசாரிக்க வேண்டும். உங்களின் படிப்பை வெற்றிகரமாக்குவதில் இதுபோன்ற அம்சங்கள் முக்கியமானவை.
சீனியர்களிடம் விசாரணை:
நீங்கள் ஓரளவு பெயர்பெற்ற வணிகப் பள்ளியில் சேர்வதற்கு முன், அக்கல்வி நிறுவனத்தைப் பற்றி தெரிந்துகொள்ள, மற்றவர்களை விட, அப்போதைக்கு அங்கு படிக்கும் சீனியர்களே சிறந்தவர்கள் என்பதை நினைவில் வைக்க வேண்டும். ஏனெனில் அவர்களை விட நேரடி அனுபவம் பெற்று உண்மையை சொல்பவர்கள் வெளியில் இருப்பது அபூர்வம். எனவே முடிந்தால் நீங்களே நேரடியாகவோ அல்லது நண்பர்கள் மூலமோ சீனியர்களை தொடர்புகொள்ள முயற்சிக்கவும். மேலும் இ-மெயில் அல்லது பேஸ்புக் போன்றவற்றின் மூலமாகவும் தொடர்புகொள்ள முயற்சிக்கலாம். உங்களுக்கு கல்வி நிறுவனம் பற்றி கேட்கத் தோன்றும் விஷயங்கள் அனைத்தையும் தயங்காமல் கேட்கவும். இதன்மூலம் நீங்கள் உண்மையான, உருப்படியான தகவல்களை பெற முடியும்.
கல்விக் கடன்:
ஓரளவு பெயர்பெற்ற ஒரு வணிகப் பள்ளியில் எம்.பி.ஏ. சேர்வதற்கு முன்பாக, கவனத்தில் கொள்ளவேண்டிய மிக முக்கிய விஷயம் கல்விக் கடன் பற்றியது. இதுபோன்ற சூழல்களில் மிக அதிகமான தொகையை வங்கியில் கடனாக பெற்று தேவையின்றி மாட்டிக்கொள்ள வேண்டாம். ஏனெனில் படிப்பு முடிந்தவுடன் செழிப்பான வேலை உத்திரவாதம் இல்லாத நிலையில், அதிகளவிலான மாதத் தவணை கட்டவேண்டிய இக்கட்டான சூழலை வளர்த்துக்கொள்ள வேண்டாம். அந்த நிலை, உங்களின் வாழ்வையே தடமாற்றிவிடும். எனவே இருக்கும் வளத்தை வைத்து ஏதாவது செய்ய முடியுமா என்று பாருங்கள். முடியவில்லையெனில், எம்.பி.ஏ. படிக்கும் திட்டத்தையே கைவிடுவது நல்லது. அந்த சமயத்தில் பணத்தை சேர்க்கும் விதமாக ஒரு வருடம் வேலை பார்ப்பது சிறந்தது. புதிதாக இக்கட்டில் மாட்டிக்கொள்ளாமல், இருக்கும் சிக்கலை விடுவிப்பதே புத்திசாலித்தனம்.
ஒரு வணிகப் பள்ளியில் எம்.பி.ஏ. சேர்வது மட்டுமே பெரிய விஷயமல்ல. நாம் மேலே சொன்ன அம்சங்களை கவனத்தில்கொண்டு அதன்படி செயல்பட்டு வெற்றி காண்பதும் மிகப் பெரிய விஷயமே.
