UPDATED : ஜன 17, 2011 12:00 AM
ADDED : ஜன 17, 2011 11:40 AM
இந்திய அரசியல்வாதிகள் சொந்தமாக கல்வி நிறுவனங்கள் துவக்குவதற்கு பதிலாக ஊரகப்பகுதிகளில் சுகாதார நிலையங்களை அமைக்கவும் முன்வர வேண்டும். நாட்டில் 750க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள், மற்றும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். பெரும்பாலோனோர் கிராம பகுதிகளிலிருந்து எம்.பி., மற்றும் எம்.ஏ.,க்களாக தேர்வாகியுள்ளனர். இவர்களில் செல்வாக்கு பெற்ற அரசியல்வாதிகள் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.
புதிதாக கல்லூரி தொடங்குவதற்கும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் கல்வி நிறுவனங்களை துவக்குவதற்கு மட்டும் ஏன் அதிக முக்கியத்துவம் தருகின்றனர். அதற்கு பதிலாக எத்தனையோ கிராமப் பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் கூட இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் இவர்கள் ஏன் கிராமப் பகுதிகளில் மருத்துவமனைகள் தொடங்கி மக்களுக்கு சேவை செய்யலாமே? ஆனால் ஒரு சிலர் கூட இதனை செய்வதில்லை.
சாதாரணமாக ஒரு கலைக்கல்லூரியாக துவக்கி அறிவியல் கல்லூரி அடுத்து இன்ஜினியரிங், மெடிக்கல் என தனியாக பல்கலைக்கழகம் வரை தொடங்கி விடுகின்றனர். இதற்கென தனியாக ஒரு அறக்கட்டளையை தொடங்கி அதன் கீழ் இந்த கல்வி நிறுவனங்களை நடத்துகின்றனர். இதற்கு காரணம் நன்கொடை, வரிச்சலுகை உள்ளிட்ட பல வழிகளிலும் சம்பாதிப்பது தான் காரணம்.
மருத்துவ மனைகளில் இது சாத்தியமாகாது. இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் ஊரகப்பகுதிகளில் தான் உள்ளனர். இவர்களின் உயிருக்கு உரிய மதிப்பளித்து ஊரகப்பகுதிகளில் சுகாதார நிலையங்களை தொடங்குவதற்கு அரசியல்வாதிகள் முன்வரவேண்டும். அதுதான் அவர்கள் தங்கள் தொகுதி மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய தொண்டு.
