தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டண அறிவிப்பு மீண்டும் ‘புஸ்’
தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டண அறிவிப்பு மீண்டும் ‘புஸ்’
UPDATED : ஜன 21, 2011 12:00 AM
ADDED : ஜன 21, 2011 03:54 PM
சென்னை ஐகோர்ட் நிர்ணயித்த காலக் கெடுவுக்குள், மேல் முறையீடு செய்த, 6,400 தனியார் பள்ளிகளிடம் விசாரணை நடத்தி முடிக்க முடியாத நிலைமை, தனியார் பள்ளி கட்டண நிர்ணயக் குழுவுக்கு ஏற்பட்டுள்ளது.
பாதி பள்ளிகளிடம் மட்டுமே விசாரணை முடிந்துள்ள நிலையில், புதிய கட்டணம் நிர்ணயிப்பதற்கு ஐகோர்ட் விதித்த காலக்கெடு, பிப்ரவரி முதல் வாரத்துடன் முடிகிறது. இதனால், தனியார் பள்ளிகளுக்கான புதிய கட்டண அறிவிப்பு மீண்டும், ‘புஸ்’ ஆகியுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கும் விவகாரம், ஆரம்பத்தில் இருந்து இடியாப்ப சிக்கலாக இருந்து வருகிறது.
ஆரம்பத்தில், தனியார் பள்ளிகளின் வரவு-செலவு விவரங்களை முழுமையாக ஆய்வு செய்யாமல், அவசர கோலத்தில் கட்டணத்தை நிர்ணயம் செய்ததால் எழுந்த பிரச்னை, இன்றுவரை முடிந்தபாடில்லை. கட்டண நிர்ணயக் குழுவின் முதல் தலைவரான கோவிந்தராஜன், மாநிலத்தில் உள்ள, 10 ஆயிரத்து 934 தனியார் பள்ளிகளுக்கு கட்டணத்தை நிர்ணயித்தார். இந்த கட்டணத்தை, 4,534 பள்ளிகள் மட்டும் ஏற்றுக் கொண்டன.
மீதமுள்ள 6,400 பள்ளிகள், குழு நிர்ணயித்த கட்டணத்தை ஏற்காமல், கட்டணத்தை உயர்த்தக் கோரி மேல் முறையீடு செய்தன. புதிய கட்டணம் நிர்ணயம் செய்வதில் கால தாமதம் ஏற்பட்டதையடுத்து, தனியார் பள்ளிகள், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.
அதில், ‘மேல் முறையீடு செய்த பள்ளிகளுக்கு, நான்கு மாதங்களுக்குள் புதிய கட்டணம் நிர்ணயிக்க, கட்டண நிர்ணயக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதற்கிடையே, கோவிந்தராஜன் ராஜினாமா செய்தார். குழுவின், அடுத்த தலைவராக ரவிராஜ பாண்டியன் நியமிக்கப்பட்டார்.
கடந்த நவம்பர் 1ம் தேதியன்று தலைவர் பொறுப்பை ஏற்றபோது, ‘ஐகோர்ட் விதித்த காலக்கெடு ஒரு மாதம் முடிந்தாலும், இன்னும் மூன்று மாதங்கள் கால அவகாசம் இருக்கிறது. அதற்குள் புதிய கட்டணத்தை விரைவாக நிர்ணயம் செய்து விடுவோம்’ என, ரவிராஜ பாண்டியன் கூறினார்.
நவம்பர் 15ம் தேதி விசாரணை துவங்கியது. இதுவரை, 20 மாவட்டங்களில் உள்ள நர்சரி, பிரைமரி பள்ளிகளிடம் மட்டுமே விசாரணை நடந்துள்ளது. இன்னும், 12 மாவட்டங்களில் விசாரணை நடத்த வேண்டியுள்ளது.
அதற்கடுத்து, தனியார் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிடம் விசாரணை நடத்த வேண்டும். இதற்கெல்லாம் போதிய கால அவகாசம் இல்லை. ஐகோர்ட் விதித்த நான்கு மாத காலக்கெடு, பிப்ரவரி முதல் வாரத்துடன் முடிவதால், புதிய கட்டண அறிவிப்பு மீண்டும், ‘புஸ்’ ஆகியுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலர் நந்தகுமார் கூறும்போது, ‘ஆரம்பத்தில் விசாரணை வேகமாக நடந்தது. தற்போது, வாரத்திற்கு மூன்று நாட்கள் தான் விசாரணை நடக்கிறது.
‘ஐகோர்ட் விதித்த காலக் கெடுவுக்குள், அனைத்துப் பள்ளிகளிடமும் விசாரணை நடத்தி முடிக்க முடியாது. எனவே, புதிய கட்டண அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்த தனியார் பள்ளி நிர்வாகிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்’ என்றார்.
மேலும் கால அவகாசம் கேட்க திட்டம்?: மேல் முறையீடு செய்த அனைத்து பள்ளிகளிடமும் விசாரணை நடத்தி, அவர்கள் தரும் வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்து, அதனடிப்படையில் புதிய கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்.
இப்பணிகளை, ‘எடுத்தோம்; கவிழ்த்தோம்’ என செய்வதற்கு, குழுத் தலைவர் தயாராக இல்லை என கூறப்படுகிறது. அனைத்து பணிகளையும் பொறுமையாக செய்து, பள்ளி நிர்வாகிகள், பெற்றோர் ஆகிய இரு தரப்பினரும் ஏற்கும் வகையில் நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என குழு கருதுகிறது.
எனவே, இதற்கெல்லாம் போதிய கால அவகாசம் இல்லாததால், புதிய கட்டணம் நிர்ணயிப்பதற்கான கால அவகாசத்தை மேலும் சில மாதங்களுக்கு நீட்டித்து கேட்க, குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதிய கட்டண அறிவிப்பை, மே இறுதிக்குள் அறிவித்தால், அடுத்த கல்வியாண்டிலாவது பிரச்னை இல்லாமல் இருக்கும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
