‘பொறியியல் படிப்புக்கு நுழைவுத் தேர்வு கிடையாது’: கபில் உறுதி
‘பொறியியல் படிப்புக்கு நுழைவுத் தேர்வு கிடையாது’: கபில் உறுதி
UPDATED : ஜன 27, 2011 12:00 AM
ADDED : ஜன 27, 2011 01:31 PM
சென்னை: “பொறியியல் படிப்புகளில் சேர, தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டம் எதுவும் கிடையாது,” என, மத்திய அமைச்சர் கபில் சிபல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் சேர, தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, மத்திய அமைச்சர் கபில் சிபலுக்கு கடந்த 3ம் தேதி, முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியிருந்தார். இதற்கு, கபில் சிபல் பதிலளித்து, நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ‘பொறியியல் படிப்புகளில் சேர, தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டம் எதுவும் கிடையாது. இந்த விவகாரத்தில், மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்காமல் எந்த முடிவையும் எடுக்க மாட்டோம். மருத்துவப் படிப்புகளுக்கான விவகாரத்தில், மேல் நடவடிக்கைக்காக, உங்களது கடிதத்தை, மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத்திற்கு அனுப்பியுள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.
