UPDATED : பிப் 01, 2011 12:00 AM
ADDED : பிப் 01, 2011 02:32 PM
தனியார் துறையை அனுமதித்த பின் இந்திய இன்சூரன்ஸ் துறை கடுமையான போட்டியை உள்ளடக்கியதாகவும் சிறப்பான வளர்ச்சியை உள்ளடக்கியதாகவும் மாறி வருகிறது. எல்.ஐ.சி., போன்ற உலகின் மிகச் சிறந்த இன்சூரன்ஸ் நிறுவனத்தோடு போட்டி போடத் துடிக்கும் தனியார் கம்பெனிகள் அந்தத் துறையில் கடும் போட்டியை ஏற்படுத்தி வருகின்றன.
பொது இன்சூரன்ஸ் துறையில் கம்பெனிகள் அதிகமாக இயங்குகின்றன. எனவே இங்கும் போட்டி அதிகம். இதில் அரசுத் துறையில் இயங்கி வரும் 4 கம்பெனிகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு வளர்ச்சியை கண்டு வரும் துறையில் பல்வேறு பொறுப்புகளுக்கும் ஆட்கள் அதிகம் தேவைப்படுகின்றனர்.
தனியார் துறையில் பல பணிகளுக்கும் எண்ணற்றவர்கள் எப்போதும் தேவைப்படுகின்றனர். நிர்வாகப் பணிகளுக்கு அதிக மானோர் தேவைப்படுவதில்லை. இதனால் தான் அரசுத் துறையில் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பல ஆண்டுகளாக ஊழியர்களை புதிதாக நியமிக்கவில்லை.
வங்கித் துறையில் நரசிம்மன் கமிட்டியின் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின் அந்தத் துறை பிரமிக்கத் தக்க மாற்றங்களை செயல்படுத்தி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால் இன்சூரன்ஸ் துறையில் அந்த அளவு வரவேற்கத்தக்க மாற்றங்கள் இல்லை என்பதே உண்மை.
எப்போதும் இன்சூரன்ஸ் துறையில் தேவைப்படுவது ஏஜென்டுகள் தான். இதனால் இன்சூரன்ஸ் துறையை கட்டுப்படுத்தி நிர்வகித்து வரும் ஐ.ஆர்.டி.ஏ., இன்சூரன்ஸ் ஏஜென்டுகளை நியமிப்பதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தியுள்ளது. ஏஜென்டுகள் தான் இன்சூரன்ஸ் பாலிசிகளை பொது மக்களிடம் எடுத்துச் செல்கின்றனர். அவர்களை நம்பித் தான் பொது மக்கள் பாலிசிகளை எடுத்துக் கொள்கின்றனர்.
ஒரு நிறுவனத்தின் பாலிசிகளை மட்டுமே ஒரு ஏஜென்ட் விற்பனை செய்ய முடியும். லைப் இன்சூரன்ஸ் துறையில் ஒரு நிறுவனத்திலும் பொது இன்சூரன்ஸ் துறையில் ஒரு நிறுவனத்திலும் மட்டுமே ஒருவர் ஏஜென்டாகப் பணி புரிய முடியும். 2 துறைகளிலும் பணி புரியத் தேவைப்படும் ஒருங்கிணைந்த லைசென்சையும் ஒருவர் பெறலாம். 3 ஆண்டுகளுக்கு லைசென்ஸ் செல்லுபடியாகும். இன்சூரன்ஸ் ஏஜென்டாக விரும்புவோர் குறைந்தது 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
5000 பேர் மக்கள் தொகை கொண்ட ஊரில் ஏஜென்டாக பணியாற்ற விரும்பினால் குறைந்தது பிளஸ் 2 தகுதி பெற்றிருக்க வேண்டும். இதை விட குறைவான மக்கள் தொகை உள்ள ஊரில் பணியாற்ற விரும்பினால் 10ம் வகுப்பு தகுதி போதும். இன்சூரன்ஸ் கம்பெனிகள் நடத்தும் பயிற்சி வகுப்பில் 100 மணி நேரம் கலந்து தேர்ச்சிபெற வேண்டும். 2 துறைகளிலும் ஏஜென்டாகப் பணியாற்ற 150 மணி நேரப் பயிற்சிபெற்றிருக்க வேண்டும். ஏற்கனவே பொது இன்சூரன்ஸ் துறையில் அரசு நிறுவனங்களில் ஏஜென்டாகப் பணி புரிபவர்களில் பலரும் துறையில் சீர்திருத்தங்கள் இல்லாதது குறித்து வருத்தம் தெரிவிக்கின்றனர்.
கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட பின்னும் குறைவான வேகத்தில் இயங்கும் கனெக்டிவிடி பிரச்னைகள், நிர்வாகத்தில் தடையாக விளங்கும் ஊழியர் சங்கங்களின் பிற்போக்கு சிந்தனை, ஊழியர்களின் மாறாத மனப் போக்கு மற்றும் பாலிசிக்கள் குறித்த போதிய தகவல்கள் இல்லாமை, இன்னமும் கூட உயர் அலுவலகங்களில் தக்கவைத்துக் கொள்ளப்படும் அப்ரூவல் நடைமுறைகள் போன்றவை புதிய ஏஜென்டுகள் இந்த நிறுவனங்களில் பணியாற்ற விரும்பாத வண்ணம் பார்த்துக் கொள்கின்றன. இதையும் தாண்டி அரசுத் துறை நிறுவனங்களில் ஏஜென்டாகப் பணி புரிய விரும்புவோர் அதிகமாக உள்ளனர்.
