UPDATED : பிப் 04, 2011 12:00 AM
ADDED : பிப் 04, 2011 06:16 PM
அமெரிக்காவின் டிரை-வேலி(டி.வி.யு) பல்கலைக்கழக விஷயத்தில் சமீபத்தில் இந்திய மாணவர்களுக்கு ஏற்பட்ட அவமானங்களும், சிரமங்களும் நாடுமுழுவதும் உள்ள மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளன. அந்த மாணவர்களின் துயர்துடைக்க இந்திய அரசினால் பெரிய அளவில் ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே இனிமேல் இத்தகைய அவலம் நிகழாமல் இருக்க மத்திய மனிதவள மேம்பாட்டு துறை ஒரு புதிய முடிவிற்கு வந்துள்ளது.
அதன்படி, பொதுத்துறையின் கீழ்வரும் எஜுகேஷனல் கன்சல்டன்ட் இந்தியா லிமிடெட்(இ.டி.சி.ஐ.எல்) என்ற அமைப்பிடம், வெளிநாட்டில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கென்றே ஒரு தனிப்பட்ட வலைத்தளத்தை ஏற்படுத்துவது சம்பந்தமாக ஒரு ப்ராஜக்ட் அறிக்கையை கேட்டுள்ளது. இ.டி.சி.ஐ.எல். அமைப்பானது, இந்தியா மற்றும் வெளிநாடுகளிலுள்ள பலவித படிப்புகள் சம்பந்தமாக ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப சேவைகளை வழங்கி வருகிறது.
இந்த வலைத்தளத்தில் வெளிநாடுகளிலுள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அவற்றின் அங்கீகார மற்றும் தர விவரங்கள், அவை வழங்கும் படிப்புகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் எளிதில் கிடைக்கும் வகையிலும், அவ்வப்போது மாறும் நிலவரங்கள் உடனடியாக பதிவு செய்யப்பட்டு இருக்கும் வகையிலும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் இனிமேலும் இந்திய மாணவர்கள் இதுபோன்று பாதிக்கப்படுவதை தடுக்க முடியும் என்று சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
