சென்னை பல்கலை மாணவர்களுக்கு இணைய வகுப்பு திட்டம் துவக்கம்
சென்னை பல்கலை மாணவர்களுக்கு இணைய வகுப்பு திட்டம் துவக்கம்
UPDATED : பிப் 10, 2011 12:00 AM
ADDED : பிப் 10, 2011 03:48 PM
சென்னை: சென்னை பல்கலை மாணவர்களுக்கு, ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம் வகுப்புகளை நடத்தும், இணைய பல்கலைத் திட்டம் நேற்று துவக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக் கழகத்தின் சார்பில், இணைய பல்கலைத் திட்ட துவக்க விழா நேற்று நடந்தது. இத்திட்டத்தில், சென்னை பல்கலையின் நான்கு வளாகங்களும், அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் ஏழு கல்லூரிகளும், ‘வீடியோ கான்பரன்சிங்’ முறையில் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், ஒரு இடத்தில் நடத்தப்படும் பாடத்தை, மற்ற இடங்களில் உள்ள மாணவர்கள் பார்க்க முடிவதுடன், பாடம் நடத்தும் பேராசிரியருடன் உரையாடவும் முடியும்.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் நிதியுதவியுடன், 6 கோடியே 50 லட்ச ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டத்தை, தமிழ் இணைய பல்கலைக் கழகத்தின் தலைவர் குழந்தைசாமி துவக்கி வைத்தார்.
அவர் பேசும் போது, “அறிவு ஒவ்வொரு ஐந்தாண்டிற்கும் ஒருமுறை மாறி வருகிறது. ஒருவர் படித்து பட்டம் பெற்று, அதை வைத்தே வாழ்நாள் முழுவதும் பணிபுரியும் நிலை தற்போது இல்லை. வாழ்நாள் முழுவதும் கற்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், சமுதாயம் முழுவதுமே வகுப்பறையில் உள்ளது. அவர்களுக்கு கல்வி வழங்க இத்தகைய, ‘டெலி எஜுகேஷன்’ முறை பயனுள்ளதாக இருக்கும்,” என்றார்.
உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் கணேசன் பேசும் போது, “தமிழக அரசு 2020ம் ஆண்டில் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கையை 25 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. அதற்கு, ‘டெலி எஜுகேஷன்’ முக்கிய கருவியாகத் திகழும். பல்கலைகள் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தவறினால், அது உயர்கல்விக்கு பின்னடைவாக அமையும். இத்திட்டம் கல்லூரி ஆசிரியர்களுக்கும் பயனளிக்கும்,” என்றார்.
சென்னை பல்கலை துணைவேந்தர் திருவாசகம் பேசும்போது, “இத்திட்டத்தின் மூலம் வாரத்திற்கு இரு முறை வகுப்புகள் நடத்தப்படும். இதில், 25 ஆயிரம் மாணவர்கள் பயனடைவர். அடுத்த கல்வியாண்டில் இத்திட்டம் மேலும் 11 கல்லூரிகளுக்கு நீட்டிக்கப்பட்டு, தினசரி வகுப்புகள் நடைபெறும்,” என்றார்.
இத்திட்டத்தில் முதற்கட்டமாக, ஆங்கில மொழிப் பயிற்சி, குழு விவாதம், மாதிரி நேர்முகத் தேர்வு, மென்திறன் பயிற்சி உள்ளிட்ட மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலான வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
‘பஸ் டே’வை முறைப்படுத்த நடவடிக்கை:
நிகழ்ச்சியின் முடிவில் நிருபர்களுக்கு பேட்டியளித்த உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் கணேசன், “பஸ் டே கொண்டாட்டங்களின் போது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ‘பஸ் டே’ கொண்டாட்டங்களை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
“எம்.ஜி.ஆர்., ஜானகி கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக, கல்லூரிக் கல்வி இயக்குனர் விசாரணை நடத்தி வருகிறார். விசாரணை அறிக்கை கிடைத்தவுடன், மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் ஏற்கும் வகையில் சுமூகத் தீர்வு காணப்படும்,” என்றார்.
