UPDATED : பிப் 12, 2011 12:00 AM
ADDED : பிப் 12, 2011 02:35 PM
திறந்தவெளி பள்ளி நெட்வொர்க் -ஐ மேம்படுத்துவதற்காக இலகுவான விதிமுறைகளை சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய மனிதவள அமைச்சர் கபில் சிபலின் தலைமையில், அத்துறையின் உயரதிகாரிகள் கலந்துகொண்ட திறந்தவெளி பள்ளிக்கான தேசிய கல்வி நிறுவனத்தின்(என்.ஐ.ஓ.எஸ்) கூட்டத்தில், நாட்டின் தொலைதூர பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள திறந்தவெளி பள்ளி அமைப்பின் நெட்வொர்க் -ஐ மேம்படுத்தும் பொருட்டு, நெகிழ்வுத்தன்மையுள்ள விதிமுறைகளை சேர்க்க திட்டமிடப்பட்டது. மேலும் திறந்தவெளி பள்ளிகளின் பாடத்திட்டங்களுக்கான தர அளவீடுகளையும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் திறன்வாய்ந்த மாணவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்புகளை அதிகரிக்க, தொழில்முறை பயிற்சிகளுக்கும், கல்வி நிலைய பாடத்திட்டங்களுக்கும் இடையே ஒத்துழைப்பை ஏற்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டது. மேலும் தொடக்க கல்வி நிலையிலுள்ள பணியிலிருக்கும் பயிற்சிபெறாத ஆசிரியர்களுக்கு கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் தொலைநிலை பயிற்சி திட்டத்தின் மூலமாக தொழில்முறை மற்றும் கல்வி சார்ந்த பயிற்சிகளை வழங்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தொழில்துறை கல்வி மற்றும் பயிற்சி பற்றியும், அவற்றை பொதுக் கல்வி பாடங்களோடு இணைப்பது சம்பந்தமாகவும் என்.ஐ.ஓ.எஸ். அமைப்பால் தயாரிக்கப்பட்ட ஒரு திட்ட அறிக்கைப் பற்றி இந்த உயர்மட்டக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த திட்ட அறிக்கையானது, சீனியர் செகண்டரி நிலை படிப்பில் தொழிற்கல்வியை அறிமுகப்படுத்த பரிந்துரை செய்கிறது.
