தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில் சத்துணவு இல்லாமல் பட்டினி
தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில் சத்துணவு இல்லாமல் பட்டினி
UPDATED : பிப் 12, 2011 12:00 AM
ADDED : பிப் 12, 2011 02:49 PM
சாத்தூர்: விருதுநகர் மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் சத்துணவு இல்லாமல், மாணவர்கள் பட்டினி கிடக்கின்றனர்.
கடந்தாண்டு போத்திரெட்டி பட்டி, விஸ்வநத்தம், நரிக்குடி உட்பட 17 தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இதனால் கிராமப்புற மாணவர்கள் நகரங்களுக்கு சென்று படிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய், கூடுதல் நேரம் படிப்பில் கவனம் செலுத்த வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.
ஐந்தாம் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்பில் சேர்ந்த போதும், இது வரை வழங்கப்பட்ட சத்துணவு தற்போது கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். பலர் காலையில் சாப்பிடாமல் தான் பள்ளிக்கு வருகின்றனர். மதியம் சத்துணவு கிடையாது என்ற நிலையில் வெறும் வயிற்றுடன் மாலையில் வீட்டிற்கு திரும்புகின்றனர்.
உணவு வழங்காத காரணம் குறித்து மாணவர்கள் கேட்கும் போது, நெருக்கடிக்கு ஆளாகும் ஆசிரியர்கள் பதில் சொல்ல முடியாமல் திணறுகின்றனர். இது குறித்து பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் ஆறு முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, சத்துணவு வழங்க கூடுதல் பொருள் ஒதுக்கீடு உத்திரவை அரசு வழங்கவில்லை என்று கூறி சத்துணவு மையத்தினர் கை விரித்துவிட்டனர்.
இதனால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை குறையும் அபாயம் உள்ளது, என்றார்.சத்துணவு அதிகாரி ஒருவர் கூறுகையில், ""இது குறித்து அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் விரைவில் சத்துணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார். பசி கொடுமையால் யாரும் படிக்காமல் இருக்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில், மதிய உணவு வழங்கும் தமிழக அரசு, கிராமங்களில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கு சத்துணவு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
