UPDATED : பிப் 14, 2011 12:00 AM
ADDED : பிப் 14, 2011 04:20 PM
20 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் எம்.பி.ஏ., படித்தவர் என்றால் மிகுந்த மரியாதையோடு பார்க்கப்படும் சூழலும் இருந்தது. ஆனால் தற்போது எண்ணற்ற கல்லூரிகளில் எம்.பி.ஏ., படிப்பானது நடத்தப்படுகிறது.
எந்தக் கல்லூரியில் படித்தால் எம்.பி.ஏ., பயனுள்ளதாக இருக்கும் என்பதே மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் பெரிய கவலையாக இருக்கிறது. எம்.பி.ஏ., படிப்பை முறையாக சிறந்த கல்லூரி ஒன்றில் படிக்கும் போது அதைப் படிப்பவர், அந்தப் படிப்பினால் சிறப்பான அறிவுத் திறனையும் வித்தியாசமாக யோசிக்கும் திறனையும் பெறுகின்றனர்.
மேலாண்மைத் திறனை அதிகரிக்க உதவும் இந்தப் படிப்பினால் ஆக்கபூர்வமான ஆலோசனைகளும் கூட சாத்தியமாகிறது. பன்முகக் கலாசாரப் பரிமாறலுக்கும் கூட உதவும் இந்தப் படிப்பு இன்றைய கடுமையான போட்டி நிறைந்த கார்ப்பரேட் உலகில் எம்.பி.ஏ., பட்டதாரி ஒருவர் வெற்றிகரமாக இயங்கிடவும் வழி செய்கிறது.
ஆனால் இன்று எண்ணற்ற எம்.பி.ஏ., கல்வி நிறுவனங்கள் இருப்பது ஆரோக்கியமானதுதானா? இந்த கல்வி நிறுவனங்களில் முறையான அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள் எத்தனை? எனவே எம்.பி.ஏ., படிப்பில் சேர விரும்பும் ஒருவர் அவர் சேர விரும்பும் கல்வி நிறுவனம் பற்றிய அடிப்படைத் தகவல்கள் அனைத்தையும் சேகரிப்பது முக்கியம். உலகில் மாறிவரும் மேனேஜ்மென்ட் கல்வி குறித்த விழிப்புணர்வோடு பிசினஸ் கல்வி நிறுவனங்கள் தங்களது பாடத்திட்டத்தைக் கொண்டிருக்கின்றனவா என்பதை அறிவதும் அவசியம்.
எம்.பி.ஏ., கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் குறித்த தகவல்களை அறிவதும் முக்கியம் தான். சிறப்பான கல்வியைக் கொண்டிருப்பவர்களா அந்த ஆசிரியர்கள் என்பதை அறிய முயல வேண்டும். பணத்தைக் கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்திருக்கும் ஆசிரியர் வியாபாரி போலத் தான் செயல்படுவாரே தவிர ஆசிரியப் பணிக்கான குணாதிசயங்களைப் பெற்றிருக்க வாய்ப்பிருக்காது.
சிறப்பான தகவல் தொடர்புத் திறனைக் கொண்டிருப்பவராகவும் அவர் இருப்பது அவசியம். கன்சல்டன்சி மற்றும் ஆசிரியர் திறன்களோடு மேலாண்மைப் பிரிவில் ஆய்வுப் பணியை மேற்கொண்டிருப்பவராகவும் அவர் இருக்க வேண்டும். தொழில் நிறுவனங்கள் நடத்தும் பிசினஸ் ஸ்கூல்களை தேர்வு செய்வதிலும் கவனம் தேவை.
வணிக நோக்கில் மட்டுமே நடத்தப்படும் தொழில் நிறுவனங்கள் போல அல்லாது அவர்களால் நிறுவப்படும் பிசினஸ் பள்ளிகள் நல்ல நோக்கம் கொண்டவையாக இருக்க வேண்டும். இது போன்ற நிறுவனங்களில் எம்.பி.ஏ., படித்து முடிப்பவர்கள் நல்ல வேலையை பிற தொழில் நிறுவனங்களில் பெற கல்வி நிறுவனம் தடையாக இருக்கக் கூடாது.
சிறப்பான மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனமானது பின்வரும் சிறப்புகளைப் பெற்றிருக்க வேண்டும். தொழில் அனுபவம் தருவதாகவும், ஆலோசனை அனுபவம் தருவதாகவும், ஆய்வு வாய்ப்பைத் தருவதாகவும் மற்றும் கற்பிக்கும் அனுபவத்தைத் தருவதாகவும் இருக்க வேண்டும். இதைத் தருவதாக அமைந்திடும் கல்வி நிறுவனங்கள் சிறப்பான பிசினஸ் பள்ளிகள் என நாம் நிச்சயமாகக் கூறலாம்.
இவை எதையும் பற்றி யோசிக்காமல் நமக்குத் தேவை ஒரு எம்.பி.ஏ., தகுதி தான் என்பதாகத் தான் நமது பெரும்பான்மையான மாணவர்கள் எம்.பி.ஏ., படிப்பை அணுகுகிறார்கள். ஆனால் அது மிகவும் தவறானது. எனவே சிறந்த கல்வி நிறுவனத்தைத் தேர்வு செய்யுங்கள். அதில் சேருவதற்கான நுழைவுத் தேர்வை, மேட் போன்ற தேர்வை, வெற்றிகரமாக எதிர்கொள்ள சரியான முறையில் தயாராகுங்கள்.
