என்.ஐ.டி-களில் எம்.சி.ஏ. படிப்பதற்கான நுழைவுத்தேர்வு
என்.ஐ.டி-களில் எம்.சி.ஏ. படிப்பதற்கான நுழைவுத்தேர்வு
UPDATED : பிப் 15, 2011 12:00 AM
ADDED : பிப் 15, 2011 12:53 PM
இந்த எம்.சி.ஏ. படிப்புகள் திருச்சி, கோழிக்கோடு, சூரத்கல், அகர்தலா, அலகாபாத், போபால், துர்காபூர், ஜாம்ஷெட்பூர், குருஷேத்ரா, ராய்ப்பூர் மற்றும் வாரங்கல் ஆகிய இடங்களிலுள்ள மொத்தம் 11 என்.ஐ.டி -களால் மட்டுமே நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் நடத்தப்படும் இந்த வருடத்திற்கான என்.ஐ.எம்.சி.இ.டி-2011 தேர்வு, போபாலிலுள்ள மவுலானா ஆசாத் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி -ஆல் நடத்தப்படுகிறது.
என்.ஐ.டி-கள் நடத்தும் இந்த எம்.சி.ஏ. படிப்புகளின் பாடத்திட்டங்கள், பல்வேறு ஐ.டி. நிறுவனங்களின் தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. 11 என்.ஐ.டி -களில் மொத்தமாக 828 எம்.சி.ஏ. இடங்கள் உள்ளன. மே 15 -இல் நடக்கும் இந்த நுழைவுத்தேர்வு திருச்சி, கோழிக்கோடு, மும்பை, டெல்லி, சூரத்கல் உள்ளிட்ட பல இடங்களில், காலை 10 முதல் 12 மணிவரை நடக்கிறது.
இத்தேர்வுக்கான கேள்வித்தாள்கள் கணிதம், பொது ஆங்கிலம், கணினி விழிப்புணர்வு, லாஜிக்கல் ரீசனிங், பகுப்பாய்வு திறன் போன்ற பிரிவுகளைக் கொண்டிருக்கும். மொத்தம் 120 மல்டிபில் சாய்ஸ் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு சரியான விடையும் 4 மதிப்பெண்களைப் பெறும். அதேசமயம் ஒவ்வொரு தவறான விடையும் ஒரு எதிர்மறை மதிப்பெண்ணை(நெகடிவ் மார்க்) பெறும். இந்த தேர்வுக்கான விரிவான பாடத்திட்டங்கள் என்.ஐ.எம்.சி.இ.டி-2011 தகவல் குறிப்பேட்டில் கிடைக்கும்.
ஒவ்வொரு என்.ஐ.டி -யிலும் நீங்கள் சேர்க்கைக்காக தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டாம். கவுன்சலிங்/சேர்க்கை செயல்பாட்டின்போது விருப்பமான கல்வி நிலையத்தை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும். கவுன்சலிங் விவரங்கள் www.nimcet2011nitb.in என்ற வலைதளத்தில் அறிவிக்கப்படும். மேலும் மாணவர்கள் அவ்வப்போதைய தகவல்களுக்கு அடிக்கடி வலைதளத்தை சரிபார்க்கவும்.
கணிதம், புள்ளியியல், வணிக கணிதம், வணிகப் புள்ளியியல் அல்லது கம்ப்யூடேஷனல் கணிதம் ஆகிய பாடங்கள் ஏதேனும் ஒன்றில் குறைந்தது 60% மதிப்பெண்களுடன், ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் இளநிலை பட்டம் பெற்றவர்கள் மற்றும் 12 ம் வகுப்பில்(கணிதம் முக்கியம்) 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அதேசமயம் இளநிலை படிப்பில் இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்கள் கவுன்சிலிங்கின் போதோ அல்லது ஆகஸ்ட் 31 ம் தேதிக்கு முன்போ தகுதிச்சான்றை சமர்ப்பித்து விட வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் விவரங்களை www.nimcet2011nitb.in என்ற வலைதளத்தில் விரிவாக பெறலாம். ஆன்லைன் விண்ணப்ப வசதிகள் மார்ச் 28 வரை கிடைக்கும். அனுமதி அட்டைகள்(அட்மிட் கார்ட்) அதே வலைதளத்தில் கிடைப்பதோடு, அதை மே 2 முதல் டவுன்லோட் செய்யவும் முடியும். நுழைவுத்தேர்வின் முடிவுகள் மே 31 அன்று வெளியிடப்படும்.
