தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விடைத்தாள் திருத்த ஆசிரியர்களை அனுப்பாத கல்லூரிகள் மீது நடவடிக்கை

விடைத்தாள் திருத்த ஆசிரியர்களை அனுப்பாத கல்லூரிகள் மீது நடவடிக்கை

விடைத்தாள் திருத்த ஆசிரியர்களை அனுப்பாத கல்லூரிகள் மீது நடவடிக்கை


UPDATED : பிப் 15, 2011 12:00 AM

ADDED : பிப் 15, 2011 04:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 15, 2011 12:00 AM ADDED : பிப் 15, 2011 04:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னைப் பல்கலைக் கழகத்தின் விடைத்தாள் திருத்தும் பணிக்கு, 75 சதவீதத்திற்கும் குறைவான ஆசிரியர்களை அனுப்பும் கல்லூரிகளுக்கான இணைப்பை ரத்து செய்ய, பல்கலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகள் என, 100க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் படிக்கும் இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கான தேர்வுகளை, பல்கலைக் கழகம் நடத்துகிறது. இந்த விடைத்தாள்களை திருத்தும் பணியில், கல்லூரி ஆசிரியர்களை பல்கலை நிர்வாகம் ஈடுபடுத்தி வருகிறது.


ஆனால், பல தனியார் கல்லூரிகள், பல்கலையின் விடைத்தாள் திருத்தும் பணிக்கு தங்களது ஆசிரியர்களை அனுப்புவதில்லை. அவ்வாறு அனுப்பினாலும் பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு, குறைந்த எண்ணிக்கையிலான ஆசிரியர்களையே அனுப்புகின்றன. மேலும், அனுபவம் பெற்ற மூத்த ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தும் பணிக்கு, கல்லூரிகள் அனுப்புவதில்லை. புதிதாக சேர்ந்த ஆசிரியர்களையே பெரும்பாலும் அனுப்பி வைக்கின்றன. இதனால், விடைத்தாள் திருத்தும் பணி தாமதமடைகிறது.


தேர்வு முடிவுகள் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டு, மாணவர்கள் உயர்கல்வி பயிலவும், வேலைவாய்ப்பை பெறவும் வாய்ப்பு மறுக்கப்படும் நிலை உள்ளது. மேலும், பல சமயங்களில் அனுபவமற்ற ஆசிரியர்கள் விடைத்தாள்களை சரியாக திருத்தாததால், மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.


சென்னை பல்கலைக் கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில், விடைத்தாள் திருத்தும் பணிக்கு கல்லூரிகள் ஆசிரியர்களை அனுப்பாதது குறித்து விவாதிக்கப்பட்டது. இதன் முடிவில், விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பாத கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.


விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஒவ்வொரு கல்லூரியும் குறிப்பிட்ட அளவு ஆசிரியர்களை அனுப்ப வேண்டும் என, பல்கலை நிர்வாகம் தெரிவிக்கும். அதில், 75 சதவீதத்திற்கும் குறைவான ஆசிரியர்களை அனுப்பும் கல்லூரிகளுக்கு பல்கலை இணைப்பு தரப்படாது; புதிய பாடப்பிரிவுகளை துவங்கவும், மாணவர்களை சேர்க்கவும் அனுமதி ரத்து செய்யப்படும் என, முடிவெடுக்கப்பட்டது.


மேலும், கல்லூரிகளில் தகுதியான ஆசிரியர்கள் பணிபுரிகின்றனரா என, சென்னை பல்கலை ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இதில், பல கல்லூரிகளில் பெரும்பாலான பணியிடங்களில் தகுதியான ஆசிரியர்கள் இல்லை என்ற விவரம் தெரியவந்துள்ளது. இக்கல்லூரிகள் ஜூன் மாதத்திற்குள் தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என, கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


அவ்வாறு தகுதியான ஆசிரியர்களை நியமிக்காத கல்லூரிகளுக்கு, புதிய பாடப்பிரிவுக்கு அனுமதி மறுக்கப்படுவதுடன், இணைப்பும் வழங்கப்படாது என, பல்கலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, கல்லூரி செயலர்கள், முதல்வர்கள் கூட்டத்தை மார்ச் முதல் வாரத்தில் கூட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


முதுநிலை பட்ட மாணவர்களுக்கு கூடுதலாக பி.ஜி., டிப்ளமோ படிப்பும், இளநிலை பட்ட மாணவர்களுக்கு கூடுதலாக டிப்ளமோ படிப்பும் வழங்கவும் சிண்டிகேட் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுகுறித்து, பாடத்திட்டக்குழு, கல்விக்குழுக்களில் விவாதிக்கப்பட்டு அத்திட்டம் அமல்படுத்தப்படும்.


சென்னை பல்கலை சார்பில், அறிவியல், விளையாட்டு, கல்வி, சமூகநலம், எழுத்து ஆகிய துறைகளில் விருது வழங்கவும் சிண்டிகேட் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us