மாற்றுத் திறனாளி வி.ஏ.ஓ., தேர்வெழுத என்.பி.எஸ்.சி., அனுமதி மறுப்பு
மாற்றுத் திறனாளி வி.ஏ.ஓ., தேர்வெழுத என்.பி.எஸ்.சி., அனுமதி மறுப்பு
UPDATED : பிப் 19, 2011 12:00 AM
ADDED : பிப் 19, 2011 12:20 PM
சென்னை: திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி சஞ்சீவனுக்கு, நாளை நடைபெறும் வி.ஏ.ஓ., தேர்வில் பங்கேற்க அனுமதி மறுத்து, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. கேரள மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது குடும்பம், 50 ஆண்டுகளுக்கு முன், திருப்பூர் மாவட்டத்தில் குடியேறியுள்ளது.
தற்போது, திருப்பூர் தாலுகா, தென்னம்பாளையம் கிராமத்தில், குடும்பத்தினருடன் நாராயணசாமி வசித்து வருகிறார். இவரது மகன், சஞ்சீவன். பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள இவர், உடல் ஊனமுற்றவர். வி.ஏ.ஓ., தேர்வுக்காக விண்ணப்பம் (விண்ணப்ப எண்:ஏஎச் 607325) செய்திருந்தார். ஊனமுற்றவர்கள், மூன்று தேர்வுகள் வரை, தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து தமிழக அரசு விலக்கு அளித்திருக்கிறது.
இந்த சலுகையை முதல் முறையாக பெறும் வகையில், விண்ணப்பத்தில் குறிப்பிட்டு, தேர்வுக் கட்டணத்தை சஞ்சீவன் செலுத்தவில்லை. ஆனால், தேர்வுக் கட்டணம் செலுத்தவில்லை என்ற காரணத்தை குறிப்பிட்டு, சஞ்சீவனின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக, கடந்த மாதம் 27ம் தேதி டி.என்.பி.எஸ்.சி., கடிதம் அனுப்பியுள்ளது.
உடனே, கட்டண விலக்கு சலுகை பெறுவதற்கான தகுதி இருப்பதையும், மாற்றுத் திறனாளி என்பதற்கான சான்றின் நகலையும் இணைத்து, ஜனவரி 31ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி.,க்கு, சஞ்சீவன் கடிதம் அனுப்பினார். அதற்கு, நேற்று வரை எந்தவிதமான பதிலையும், டி.என்.பி.எஸ்.சி., அளிக்கவில்லை. "தேர்வுக் கட்டண சலுகை பெறுவதற்கான தகுதி இருந்தும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது வேதனை அளிக்கிறது. நாளை நடக்கும் தேர்வில் நான் கலந்துகொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சஞ்சீவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
