பிளஸ் 1 தேர்வு நடத்த அனுமதிக்கும் கல்வி அதிகாரி மீது நடவடிக்கை
பிளஸ் 1 தேர்வு நடத்த அனுமதிக்கும் கல்வி அதிகாரி மீது நடவடிக்கை
UPDATED : பிப் 21, 2011 12:00 AM
ADDED : பிப் 21, 2011 05:29 PM
"பள்ளி துவங்குவதற்கான அனுமதி பெறாமல், மாணவர் சேர்க்கை நடத்திய பள்ளிகளில், மாணவர்களை, பிளஸ் 1 தேர்வு எழுத அனுமதிக்கக் கூடாது. அனுமதிக்கும் முதன்மைக்கல்வி அலுவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில், சில ஆண்டுகளாக, சுயநிதி பள்ளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. ஆண்டுக்கு, 50க்கும் மேற்பட்ட புதிய பள்ளிகள் துவங்கப்படுகின்றன. நர்சரி - பிரைமரி பள்ளியாக துவங்கும் ஒரு பள்ளி, நாளடைவில், வளர்ச்சியடைந்து, மெட்ரிக் பள்ளியாகவும், மேல்நிலைப் பள்ளியாகவும் உருவெடுக்கிறது. மெட்ரிக் பள்ளியாக செயல்பட்டு வரும் பள்ளிகளை, மேல்நிலைப் பள்ளியாக மாற்றும் போதும், பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடத்தும் முன், பள்ளிக் கல்வித் துறை இயக்குனரிடம் அனுமதி பெற வேண்டும். அதன்பின், பள்ளி அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
புதிதாக பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடத்தும் பள்ளிகள், பெரும்பாலும், பள்ளி துவக்க அனுமதி பெறுவதேயில்லை. மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதப்போகும் சமயத்தில் தான் விண்ணப்பிக்கின்றன. பள்ளிக் கல்வித் துறை சார்பில், பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு மாணவர் பட்டியல் தயாரிக்கும் போது, துவக்க அனுமதி பெறாமல், மாணவர் சேர்க்கை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்படும். இரண்டு ஆண்டு மாணவர்கள் படித்த நிலையில், துவக்க அனுமதியை இயக்குனரகம் மறுக்கும் பட்சத்தில், அது பெரும் பிரச்னையாக உருவெடுக்கிறது.
இதை தவிர்க்கும் வகையில், நடப்பாண்டில், பிளஸ் 1 மாணவர் பட்டியல் தயாரிக்கும் போதே, துவக்க அனுமதி பெறப்பட்டவை குறித்து, விவரம் சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதில், துவக்க அனுமதி பெறாமல், மாணவர் சேர்க்கை நடத்திய பள்ளிகளில், அம்மாணவர்களுக்கு தேர்வு நடத்த அனுமதி வழங்கக்கூடாது என, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
துவக்க அனுமதி பெறாத பள்ளிக்கு, பிளஸ் 1 தேர்வெழுத அனுமதிக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதனால், 2010-11ம் கல்வியாண்டில், துவக்க அனுமதி பெறாமல், மாணவர் சேர்க்கை நடத்திய பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 1 மாணவர்கள், தேர்வெழுத முடியாத நிலை உருவாகியுள்ளது.
மார்ச் மாதம் தேர்வு துவங்கும் நேரத்தில், பள்ளிக்கல்வித்துறையின் இந்த கிடுக்கிப்பிடியால், பல பள்ளிகள் தவித்து வருகின்றன. இயக்குனரக அலுவலர் ஒருவர் கூறியதாவது: மேல்நிலைப்பள்ளி துவக்க அனுமதி மற்றும் அங்கீகாரத்துக்கு, சென்னையில் உள்ள இயக்குனரகத்தை அணுக வேண்டும். அதனால், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களிடம், துவக்க அனுமதி மற்றும் அங்கீகாரம் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படுவதில்லை.
பிளஸ் 2 தேர்வு மாணவர் பட்டியல் தயாரிக்கும் போது, குழப்பங்கள் தோன்றும். அப்போது, ஒரு சில பள்ளிகள், தன் மாணவர்களை, "பிரைவேட்' மாணவர்களாக தேர்வெழுத செய்யும் சம்பவங்களும் நடக்கின்றன. இதை தடுக்க தற்போது, அனைத்து பள்ளிகளையும், பிளஸ் 1 தேர்வு எழுதும்போதே, கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
