UPDATED : பிப் 25, 2011 12:00 AM
ADDED : பிப் 25, 2011 04:56 PM
நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பதிலளித்த அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் பவன் குமார் பன்சால் இதை தெரிவித்தார். அணுசக்தி ஆற்றல் துறை மற்றும் அறிவியல் தொழில்நுட்ப துறை ஆகிய இரு துறைகளுடன் இணைந்து மத்திய அரசு இந்த ஆய்வு மையத்தை அமைக்க உள்ளது என்றும் அவர் கூறினார்.
அகில இந்திய அளவிலான நியூட்ரினோ ஆய்வு மையம் முன்பு நீலகிரி மாவட்டத்தில் முதுமலை வனப்பகுதியில் அமைய இருந்தது. ஆனால் பல வன விலங்குகளின் வாழ்வை கருத்தில்கொண்டு, அத்திட்டம் பிறகு தேனி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டது. போடி மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வுக்கு ஏற்ற பாறைகள் அதிகம் உள்ளன. எனவே அந்த இடம் தேர்வுசெய்யப்பட்டது.
இந்த திட்டத்தில் மலையை குடைந்து உலக தரத்திலான பெரிய ஆய்வகம் அமைக்கப்படும். அந்த ஆய்வகமானது 7.5 மீ. அகலத்திலும், 2 கி.மீ. நீளத்திலும் இருக்கும். நியூட்ரினோ பண்புகளை ஆராய்வதே இதன் முக்கிய நோக்கம். ஏனெனில் நியூட்ரினோ பண்புகளை தீர்மானிப்பதுதான் இன்றைய இயற்பியல் உலகில் பெரிய சவாலாக உள்ளது. மத்திய அரசின் இந்த முடிவின் மூலம் தேனி மாவட்டம் மற்றும் தமிழகத்தின் அறிவியல் கல்வி வளர்ச்சி மேம்பாடு அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
