முதுகலை ஆசிரியர்கள் ‘ஸ்டிரைக்’; பிளஸ் 2 தேர்வுகள் பாதிப்பு?
முதுகலை ஆசிரியர்கள் ‘ஸ்டிரைக்’; பிளஸ் 2 தேர்வுகள் பாதிப்பு?
UPDATED : பிப் 28, 2011 12:00 AM
ADDED : பிப் 28, 2011 12:53 PM
சென்னை: பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி, இன்று முதல் காலவரையற்ற ‘ஸ்டிரைக்’ நடத்தப் போவதாக அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். இதனால், வரும் 2ம் தேதி துவங்கவுள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வு பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர் கூட்டமைப்பினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மெமோரியல் ஹால் முன், நேற்று மறியல் செய்ய முயன்ற அமைப்பின் தலைவர் பூபாலன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். இது போன்று மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்தது. இன்று முதல் ‘ஸ்டிரைக்’கில் ஈடுபடப் போவதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் பூபாலன் கூறியதாவது: கல்வி தொடர்பான அனைத்து துறைகளுக்கும் இயக்குனரகம் உள்ளது. மேல்நிலை கல்விக்கென தனி இயக்குனரகம் இது வரை இல்லை. எனவே மேல்நிலை உயர் கல்விக்கு தனி இயக்குனரகம் அமைக்க வேண்டும்.
மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கும் ஊதியத்தை விட முதுகலை ஆசிரியர்களுக்கு மிகக் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. எனவே, முதுகலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையாக சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்க வகை செய்யும் ‘720’ அரசாணையை காலத்திற்கேற்ப, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும் பதவி உயர்வு பெறும் வகையில் திருத்த வேண்டும். இது குறித்து ஜெகநாதன் குழு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்.
தொகுப்பூதியத்தில் பணிபுரியும் 55,000 ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியத்தை அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, இரண்டு நாளாக போராட்டம் நடத்தியுள்ளோம். எங்கள் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்காவிட்டால், இன்று (பிப்.,28) முதல் காலவரையற்ற ஸ்டிரைக் நடத்தவுள்ளோம். இதனால், அனைத்து முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும் பிளஸ் 2 பொதுத்தேர்வு பணிகளை புறக்கணிக்கும் நிலை ஏற்படும். இவ்வாறு பூபாலன் கூறினார்.
வரும் 2ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கவுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகள் துவங்க வேண்டிய நிலையில், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்வு ஆயத்தம் குறித்த ஆலோசனை கூட்டங்களிலும் பங்கேற்கவில்லை.
இதனால் தேர்வுக்கு முந்தைய கேள்வித் தாள் சரிபார்த்தல், கேள்வித் தாள் கட்டுகளை ஆய்வு செய்தல், தேர்வு மையங்களை கண்காணித்தல், கேள்வித் தாள்கள் பாதுகாத்தல் போன்ற பணிகளில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. தேர்வு துவங்கிய பின்பும் வேலை நிறுத்தம் தொடர்ந்தால், தேர்வு அறைகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்படும். இதனால் பிளஸ்2 மாணவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
