UPDATED : மார் 01, 2011 12:00 AM
ADDED : மார் 01, 2011 12:59 PM
முறைகேடுகளை தடுக்க, 4,000 உறுப்பினர்கள் அடங்கிய பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 மாணவர்களுக்கு, கடந்த 22ம் தேதியுடன் செய்முறைத் தேர்வுகள் முடிந்ததையடுத்து, முக்கியமான எழுத்துத் தேர்வுகள், நாளை 2ம் தேதி துவங்குகின்றன. இதற்காக, தமிழகத்தில் 1,859 மையங்களிலும், புதுச்சேரியில் 31 மையங்களிலும் நடக்கும் தேர்வில், ஏழு லட்சத்து 23 ஆயிரத்து 545 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
இதில், மாணவர்கள் மூன்று லட்சத்து 36 ஆயிரத்து 443 பேர். மாணவியர், மூன்று லட்சத்து 87 ஆயிரத்து 102 பேர். தமிழகத்தில் ஏழு லட்சத்து 12 ஆயிரத்து 28 மாணவர்களும், புதுச்சேரியில் 11 ஆயிரத்து 517 மாணவர்களும் எழுதுகின்றனர். கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டில் 33 ஆயிரத்து 858 மாணவர்கள் கூடுதலாக எழுதுகின்றனர். தேர்வை சுமுகமாக நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும், தேர்வுத்துறை செய்துள்ளது. குறிப்பாக, தேர்வில் எந்தவித முறைகேடுகளும் நடக்காதபடி கண்காணிக்கவும், மீறி நடந்தால் உடனுக்குடன் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும், 4,000 உறுப்பினர்கள் கொண்ட பல்வேறு பறக்கும் படை குழுக்களை, தேர்வுத் துறை அமைத்துள்ளது.
இது தொடர்பாக, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி கூறியிருப்பதாவது: வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள மையங்களில், 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர்கள் மற்றும் எஸ்.பி.,க்கள் மேற்பார்வையில், வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களை கண்காணிக்க போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இணை இயக்குனர்கள் தலைமையிலும், தேர்வுப் பணிகளை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அறிவியல் பாட தேர்வுகளின் போது, மாற்று மாவட்டங்களை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்களாக இருந்து தேர்வை நடத்துவர்.
குற்றச்செயல்கள்: துண்டுத் தாள் வைத்திருத்தல், துண்டுத் தாள்களை பார்த்து எழுத முயற்சித்தல், மற்ற மாணவர்களை பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரிகளிடம் முறைகேடாக நடந்து கொள்ளுதல், தேர்வுத்தாளை மாற்றம் செய்தல், ஆள் மாறாட்டம் செய்தல் போன்ற செயல்கள், கடும் குற்றங்களாகும். இது போன்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டு பல்வேறு விதமான ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்ட 287 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவரவர் செய்த குற்றங்களுக்கு தகுந்தபடி தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.
சலுகை: மாணவர்கள் விடைத்தாளில் பதிவெண் உள்ளிட்ட விவரங்கள் எழுத, ஐந்து நிமிடங்களும், வினாத்தாளை நன்றாக படித்து புரிந்து கொள்ள 10 நிமிடங்களும், சலுகைகளாக வழங்கப்பட்டுள்ளன. எனவே, தேர்வுக்கான 3 மணி நேரம், 10.15க்கு துவங்கி, 1.15 மணிக்கு முடிவடையும்.
எஸ்.எஸ்.எல்.சி: மார்ச் 28ம் தேதி துவங்கி, ஏப்ரல் 11ம் தேதி வரை நடக்கும் இத்தேர்வை, எட்டு லட்சத்து 57 ஆயிரத்து 956 மாணவர்கள் எழுதுகின்றனர். புதுச்சேரியில், 15 ஆயிரத்து 529 மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர். மார்ச் 22ம் தேதி துவங்கும் மெட்ரிக் தேர்வை, ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 252 மாணவர்களும், ஆங்கிலோ இந்தியன் தேர்வை 4,873 மாணவர்களும் எழுதுகின்றனர். எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு துவங்கும் தேதியில் இருந்து, ஓ.எஸ்.எல்.சி., தேர்வும் துவங்குகிறது. இத்தேர்வை, 1,561 மாணவர்கள் எழுதுகின்றனர். இவ்வாறு தேர்வுத்துறை இயக்குனர் கூறியுள்ளார்.
