மருத்துவக் கல்லூரிகளை ஆய்வு செய்ய எம்.சி.ஐ.,க்கு அனுமதி
மருத்துவக் கல்லூரிகளை ஆய்வு செய்ய எம்.சி.ஐ.,க்கு அனுமதி
UPDATED : மார் 02, 2011 12:00 AM
ADDED : மார் 02, 2011 01:58 PM
அரசு உதவி பெறாத தொழிற்கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐகோர்ட், மருத்துவக் கல்லூரிகளை ஆய்வு செய்வது குறித்து, கடந்த மாதம் 9ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. ஐகோர்ட் உத்தரவால், மருத்துவக் கல்லூரிகளை ஆய்வு செய்ய முடியவில்லை என, மருத்துவ கவுன்சில் சார்பில் ஆஜரான வக்கீல் வி.பி.ராமன் தெரிவித்தார்.
இதையடுத்து, நீதிபதி ஜோதிமணி பிறப்பித்த உத்தரவு: கடந்த மாதம் 9ம் தேதி பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்யப்படுகிறது. மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதியை புதுப்பிப்பது தொடர்பாக அவற்றை ஆய்வு செய்ய, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அனுமதியளிக்கப்படுகிறது. வரும் 7ம் தேதி வரை உத்தரவு பிறப்பிக்கக் கூடாது. மனுதாரர் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களின் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும்.
மனுதாரர் சங்கத்தில் உறுப்பினராக இல்லை என எந்த கல்லூரி தரப்பிலாவது மருத்துவ கவுன்சிலுக்கு கடிதம் அனுப்பினால், அந்த கல்லூரிகளைப் பொறுத்தவரை, இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவு பிறப்பிக்கலாம். விசாரணை 7ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி ஜோதிமணி உத்தரவிட்டுள்ளார்.
கூட்டமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு: இந்திய மருத்துவ கவுன்சில் கடந்த செப்டம்பர் மாதம் ஒரு அறிவிப்பாணையை பிறப்பித்துள்ளது. எம்.பி.பி.எஸ்., படிப்பில் குறைந்தது 100 மாணவர்களை சேர்க்க வேண்டுமென்றால், கல்லூரியிலும், மருத்துவமனையிலும் குறைந்தபட்சம் இருக்க வேண்டிய ஆசிரியர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள், சாதனங்கள் பற்றி, அந்த அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரிகளில் இறுதியாண்டில் அனைத்து துறைகளிலும் சேர்த்து, கூடுதலாக 25 ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதை அமல்படுத்துவதில் உள்ள பிரச்னைகள் குறித்து மருத்துவ கவுன்சிலுக்கு கடிதம் அனுப்பினோம். இதற்கு எந்த பதிலும் இல்லை. இந்த நிபந்தனைகளை அமல்படுத்தவில்லை என, பல மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த நிபந்தனைகளை அமல்படுத்துவது கடினம். ஏற்கனவே, மருத்துவ துறையில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்கள் கிடைப்பது கடினம். எனவே, நாங்கள் அனுப்பிய மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். அதுவரை மருத்துவக் கல்லூரிகளை ஆய்வு செய்வதை நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
