‘தமிழ் முதல்தாளில் அதிக மதிபெண் பெறும் வாய்ப்பு அதிகம்’
‘தமிழ் முதல்தாளில் அதிக மதிபெண் பெறும் வாய்ப்பு அதிகம்’
UPDATED : மார் 03, 2011 12:00 AM
ADDED : மார் 03, 2011 04:59 PM
மதுரை: “பிளஸ்2 தமிழ் முதல்தாள் தேர்வில் சாதாரண மாணவரும் அதிக மதிப்பெண் பெறும் வாய்ப்பு அதிகமுள்ளது,” என ஆசிரியர்கள், மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.
மதுரை ஈ.வெ.ரா.,நாகம்மையார்மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியை எஸ்.கண்ணகி கூறியதாவது: பிளஸ்2 தமிழ்த் தேர்வு வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்தது. வகுப்பறையில் பயிற்றுவித்த வினாக்கள் எவ்வித மாறுதலும் இன்றி நேரடியாகவே கேட்கப்பட்டு இருந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மொழிப் பாடத்தில் நூறு மதிப்பெண் வழங்குவதாக இருந்தால் பல மாணவர்கள் தமிழ் முதல்தாளில் பெறலாம். சாதாரண மாணவர்களும் அதிக மதிப்பெண் பெறுவது உறுதி. சிலதேர்வுகளில் கட்டுரை வினாக்கள் கடினமாக கேட்கப்படும். ஆனால் இன்று பகுதி 1 முதல் இறுதி வரை அனைத்தும் விடையளிக்கும்படி இருந்தன. ஒரு மதிப்பெண் வினாக்களிலும் கடினமானது எதுவும் இல்லை.
செய்யுளில் முதல் பாடலான வாழ்த்து பகுதியையே மனப்பாடச் செய்யுளிலும் கேட்டிருந்ததால், யாரும் அதை தவிர்த்து இருக்க மாட்டார்கள். இலக்கணத்திலும் உறுப்பிலக்கணம், புணர்ச்சி விதி உட்பட அனைத்தையும் கட்டாயம் எழுதி இருப்பர். கட்டுரை வினாக்களில் திருக்குறள், மறுமலர்ச்சி பகுதி, தொடர்நிலை செய்யுள் உட்பட அனைத்தும் ‘புளூபிரின்டில்’ கூறியபடியே இருந்தன. எதிர்பாராத வினாக்களே இல்லை என்பதால், அனைவருமே நல்ல மதிப்பெண் பெறுவது உறுதி.
மதுரை ஈ.வெ.ரா., நாகம்மையார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர்.பவித்ரா: அனைத்து வினாக்களும் படித்தவையாக இருந்ததால் எளிதாக விடை யளித்துவிட்டேன். பெரும்பாலானவை வகுப்பறை தேர்வுகள், திருப்புதல் தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட்ட வினாக்களே. அவையும் புத்தகத்தின் பின்பகுதியில் இருந்தே அதிகமாக கேட்கப்பட்டு இருந்தன. இலக்கணம் உட்பட எதுவும் வெளியில் இருந்து கேட்கவில்லை.
