UPDATED : மார் 04, 2011 12:00 AM
ADDED : மார் 04, 2011 04:49 PM
மாணவர்களால் அதிகமாக எதிர்பார்க்கப்படும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2011 தொடர்பான சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான கூட்டம் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பொறியியல் சேர்க்கை குறித்த பல முக்கிய விஷயங்கள் பேசப்பட்டுள்ளன.
அதன்படி, மே 16ஆம் தேதி - தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு வெளியான மூன்றாம் நாள் - பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம் துவங்க உள்ளது. இந்த ஆண்டும் மே இரண்டாம் வார இறுதியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்பதன் அடிப்படையில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு விண்ணப்பப் படிவங்கள் பற்றாக்குறை ஏற்படாத வகையில் குறைந்தது 2 லட்சத்து 20 ஆயிரம் விண்ணப்பப் படிவங்கள் அச்சடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டிற்கு 491 பொறியியல் கல்லூரிகளில் சுமார் 1,95,324 பி.இ./பி.டெக் படிப்பிற்கான சேர்க்கை இடங்கள் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், எம்.இ./எம்.டெக்., மற்றும் எம்.பி.ஏ./எம்.சி.ஏ. பட்ட மேற்படிப்புகளுக்கான சேர்க்கை குறித்து தமிழ்நாடு பொது சேர்க்கை (டிஏஎன்சிஏ 2011) கூட்டமும் நேற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
கடந்த ஆண்டு சேர்க்கையின் போது கடைபிடிக்கப்பட்ட அதே நடைமுறையை இந்த ஆண்டும் பின்பற்றுவது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
