இன்ஜி., மாணவர்கள் புதிய கண்டுபிடிப்பில் கவனம் செலுத்த வேண்டும்
இன்ஜி., மாணவர்கள் புதிய கண்டுபிடிப்பில் கவனம் செலுத்த வேண்டும்
UPDATED : மார் 07, 2011 12:00 AM
ADDED : மார் 07, 2011 10:44 AM
புதுக்கோட்டை: ""இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்கள் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்தி தாய் நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும்,'' என மத்திய அமைச்சர் வாசன் பேசினார். புதுக்கோட்டை அடுத்த சத்தியமங்கலம் சுதர்ஸன் இன்ஜினியரிங் கல்லூரியின் 10வது ஆண்டு நிறைவு விழா நடந்தது.
சுதர்ஸன் கல்வி நிறுவனங்களின் தலைவர் சுந்தரம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் அஜய் சுந்தரம் வரவேற்றார். விழா ஆண்டு மலரை வெளியிட்டு மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் வாசன் பேசியதாவது: தமிழகத்தில் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் தான் கல்விக்கு அடித்தளம் அமைக்கப்பட்டது. கிராமங்கள்தோறும் புதிய பள்ளிகள் திறக்கப்பட்டன.
மாணவர்களுக்கு சீருடை மட்டுமின்றி மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்திய பெருமை காமராஜரையே சாரும். இந்திய தேசத்தின் எதிர்காலம் வகுப்பறைகளில் தான் வகுக்கப்படுகிறது என்பதை நன்கு உணர்ந்து தான் கல்வியின் மேம்பாட்டுக்காக முன்னுரிமை அடிப்படையில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கல்வியின் மேம்பாட்டுக்காக தனி கவனம் செலுத்தி வருகிறது. 2011 -12ம் ஆண்டுக்கு கல்வி மேம்பாட்டுக்காக மட்டும் 52 ஆயிரத்து 57 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 24 சதவீதம் அதிகமாகும். இதுபோன்று எஸ்.எஸ்.ஏ., திட்டத்துக்காக ரூ. 21 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டைவிட 40 சதவீதம் அதிகம். இவைதவிர 11வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் புதிதாக திறக்கப்பட உள்ள 14 மத்திய பல்கலைகளுக்காக 155 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சார்பில் இந்த ஆண்டு ஏழு ஐ.ஏ.எம்., கல்வி நிறுவனங்கள், 10 என்.ஐ.டி.சி., கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட உள்ளன.
இன்ஜினியரிங் படித்து முடிக்கும் மாணவர்கள் ஒவ்வொருவரும் வேலை தேடுவதில் தான் மு ழு கவனத்தையும் செலுத்திவருகின்றனர். இதில் தவறு ஒன்றும் இல்லை. இருந்தாலும் இன்ஜினியரிங் படித்து முடித்தவுடன் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்தவேண்டும்.
தற்போதைய சூழ்நிலையில் இந்திய மாணவர்களுக்கு வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள் காத்திருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். திருச்சி பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் மீனா, தொழிலதிபர் ஜி.ஆர்., மூப்பனார், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் ராமச்சந்திரன்.
தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் முன்னாள் துணை இயக்குனர் அவிச்சல் கபூர், புதுக்கோட்டை நகராட்சி முன்னாள் தலைவர் துரைதிவியநாதன், சுதர்ஸன் இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் பழனி, முன்னாள் முதல்வர்கள் பாலசுப்பிரமணியன், ராமமூர்த்தி, பேராசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் பங்கேற்றனர். கல்லூரி துணைத் தலைவர் விஜய் சுந்தரம் நன்றி கூறினார்.
