UPDATED : மார் 07, 2011 12:00 AM
ADDED : மார் 07, 2011 05:17 PM
கர்நாடகாவில் வரும் கல்வி ஆண்டில் பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநில அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் இந்த கவலையையேக் கொண்டுள்ளன. இதற்கு காரணம், அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி மையம், மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேருவதற்கான குறைந்த பட்ச மதிப்பெண்ணை அதிகரித்ததுதான்.
புதிய முறைப்படி, வரும் கல்வி ஆண்டில் பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் அல்லது அதற்கு இணையான தேர்வில் 50% மதிப்பெண்களை எடுக்க வேண்டும். முன்பு இது 45% ஆக இருந்தது. எஸ்.சி. மற்றும் எஸ்.டி. வகுப்பினருக்கு 40% ஆகா இருந்த குறைந்தபட்ச மதிப்பெண் தற்போது 45% ஆக உயர்ந்துள்ளது.
எனவே, கடந்த ஆண்டை விட குறைவான மாணவர்களே பொறியியல் படிப்பில் சேர முடியும். இதனால் 10,000 முதல் 15,000 வரையிலான மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர முடியாமல் போகும். இதனால் ஏராளமான பொறியியல் சேர்க்கை இடங்கள் காலியாக இருக்கும் வாய்ப்பும் ஏற்படும். சில புதிய தனியார் பொறியியல் கல்லூரிகள், மாணவர்கள் சேர்க்கை இல்லாமல் தவிக்கவும் வாய்ப்புள்ளது.
இருந்த போதும், தகுதியான பொறியியல் மாணவர்களை உருவாக்க வேண்டும் எனில் இந்த நடைமுறை சரியானது என்றே கல்வி ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
