கேந்த்ரிய வித்யாலயா - இக்னோ புரிந்துணர்வு ஒப்பந்தம்
கேந்த்ரிய வித்யாலயா - இக்னோ புரிந்துணர்வு ஒப்பந்தம்
UPDATED : மார் 15, 2011 12:00 AM
ADDED : மார் 15, 2011 12:57 PM
ஆசிரியர்களின் மேம்பாட்டிற்காக இக்னோவுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கேந்த்ரிய வித்யாலயா சங்கதன்(கே.வி.எஸ்) மேற்கொண்டுள்ளது.
கே.வி.எஸ். ஆசிரியர்கள், தொடர்ச்சியான தொழில்முறை மேம்பாட்டை பெறுவதற்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலமாக நாடு முழுவதுமுள்ள கே.வி.எஸ். பள்ளிகளை சேர்ந்த பிரைமரி, இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சியை இக்னோ வழங்கும்.
கே.வி.எஸ். ஆசிரியர்களுக்கு 6 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். அதில் 15 நாள் நேருக்கு நேர் பயிற்சியும், பல அம்சங்களுடன் இடம்பெறும். இந்த ஒப்பந்தமானது, மனிதவளத் துறை இணையமைச்சர் புரந்தேஸ்வரி மற்றும் இக்னோ துணைவேந்தர் ராஜசேகரன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களின் முன்னிலையில் கையெழுத்தானது.
இதுகுறித்து புரந்தேஸ்வரி கூறியதாவது, "தரமான கல்வி என்ற நிலையை எட்ட, தொடர்ச்சியான தொழில் மேம்பாடு ஆசிரியர்களுக்கு தேவைப்படுகிறது. கல்வி உரிமை சட்ட காலத்தில், ஆசிரியர்களின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இதுபோன்ற ஒப்பந்தங்கள் முக்கியமானவை" என்றார்.
ஒவ்வொரு ஆசிரியரின் தனிப்பட்ட பாடங்களுடன், கருத்து மேம்பாட்டிலும் இந்த பயிற்சி கவனம் செலுத்தும். மேலும் புதிய விஷயங்கள் சம்பந்தமான அறிவும், வேலையுடன் அது எப்படி சம்பந்தப்பட்டுள்ளது என்பது பற்றியும் பயிற்சி அளிக்கப்படும். வகுப்பறை மேலாண்மையில் புதிய விஷயங்களும், கற்பித்தலில் சிறந்த நுட்பங்களும், வியூகங்களும் பயிற்றுவிக்கப்படும்.
இந்த பயிற்சிகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் நடைபெறும். பயிற்சியின் முடிவில் ஆசிரியர்களுக்கு மதிப்பாய்வு தேர்வுகள் நடைபெறும். சான்றிதழ்களும் இக்னோவால் வழங்கப்படும்.
