UPDATED : மார் 18, 2011 12:00 AM
ADDED : மார் 18, 2011 03:17 PM
இந்திய மெடிக்கல் கவுன்சிலை(எம்.சி.ஐ) நிர்வகிக்கும் மருத்துவர்கள் அடங்கிய நிர்வாகக்குழுவின் பதவி காலம் மேலும் 1 ஆண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நீட்டிப்பிற்கான முடிவு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது. தற்போதைய நிர்வாகக் குழுவில் 6 உறுப்பினர்கள் உள்ளனர். கடந்தாண்டு, எம்.சி.ஐ. தலைவர் கேதன் தேசாய் லஞ்ச விவகாரத்தில் கைது செய்யப்பட்டதை அடுத்து, எம்.சி.ஐ. நிர்வாக வாரியத்தை அமைக்க ஒரு புதிய விதிமுறையை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியா மெடிக்கல் கவுன்சிலானது, இநதிய மருத்துவ கல்வியின் தரத்தை மேற்பார்வையிடுவது, மருத்துவ பட்டங்களுக்கு அங்கீகாரம் அளிப்பது, மருத்துவ கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பது, மருத்துவர்கள் பதிவு செய்வது மற்றும் மருத்துவ பணிகளை கண்காணிப்பது உள்ளிட்ட மிக முக்கிய பணிகளை மேற்கொள்வதற்கு அதிகாரம் பெற்ற ஒரு சட்டப்பூர்வ அமைப்பு.
கேதன் தேசாய் கைதுக்குப் பிறகு, 1956, எம்.சி.ஐ. சட்டத்தில் திருத்தம் செய்த மத்திய அரசு, எம்.சி.ஐ. மேற்கொள்ளும் தேசிய அளவிலான கொள்கை முடிவுகளில் தனது தலையீட்டை ஏற்படுத்திக் கொண்டது. இதன்மூலம் கொள்கை முடிவுகளில் ஏதாவது முரண்பாடுகள் எழுந்தால், இறுதியில் அரசு எடுக்கும் முடிவே செல்லுபடியாகும்.
