UPDATED : மார் 23, 2011 12:00 AM
ADDED : மார் 23, 2011 09:59 AM
பிளஸ் 2 கணித பாடத்தேர்வு சமீபத்தில் நடந்தது. இத்தேர்வுக்கான வினாத்தாளில் குழப்பமான வினா ஒன்று கேட்கப்பட்டது. இதன்படி வினா எண் 47க்கு ஒரே ஒரு வார்த்தையில் விடை அமைகிறது. ஆனால் இதை ஆறு மதிப்பெண் வினாவாக கேட்டுள்ளனர். இந்த வினாவுக்கு "லோபிதால் விதி" -ஐ பயன்படுத்த முடியாது. பொதுவாக லோபிதால் விதியை பயன்படுத்தி, பின் மடக்கையை நீக்கி, தீர்வு பெறக்கூடிய வினாவுக்கே ஆறு மதிப்பெண் வழங்க வேண்டும்.
வினாவை மாற்றிக் கேட்டதால், இது எவ்வகை வினா என்று அறிய முடியாமல் மாணவர்கள் குழப்பமடைந்தனர். மேலும், இந்த வினா, பாடத்திட்டம் மற்றும் வினா அமைவு முறையில் இருந்து விலகி கேட்கப்பட்டுள்ளது. எனவே இவ்வினாவை மாணவர் எழுத முயற்சித்து இருந்தாலே முழுமதிப்பெண்ணும் வழங்க வேண்டும்.
பிளஸ் 2 முடித்து உயர்கல்விக்கு செல்கையில், கவுன்சிலிங்கில் 0.5 மதிப்பெண் குறைந்தாலே 300 பேருக்கு பின்தங்கி விடுவோம். அப்படி இருக்கையில், இதற்கு முழுமதிப்பெண் தந்தே ஆக வேண்டும். இத்தேர்வின்போது ராசிபுரம், நாமக்கல் போன்ற இடங்களில் வினியோகிக்கப்பட்ட வினாத்தாளில் அச்சுப்பிழை ஏற்பட்ட வினாக்களுக்கே மதிப்பெண் வழங்கப்படும் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதுபோல இதையும் கருத வேண்டும் என ஆசிரியர்கள், மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.
