கல்வி நிறுவனங்கள் ஆர்.டி.ஐ. சட்டத்தில் விலக்கு பெற முடியாது
கல்வி நிறுவனங்கள் ஆர்.டி.ஐ. சட்டத்தில் விலக்கு பெற முடியாது
UPDATED : மார் 24, 2011 12:00 AM
ADDED : மார் 24, 2011 04:09 PM
இதுதொடர்பாக தகவல் தொடர்பு கமிஷனர் ஷைலேஷ் காந்தி கூறியதாவது, "தகவல் உரிமை சட்டத்தில் வணிக ரகசியம் சம்பந்தப்பட்ட பிரிவு 8(1)(டி) -ஐ காரணம் காட்டி, அந்த சட்டத்தின் மூலம் கேட்கப்படும் தகவலுக்கு பதிலளிக்க கல்வி நிறுவனங்கள் மறுக்க முடியாது. இது விஷயமாக தகவல் தர மறுப்பதற்கு ஒரு நிறுவனம் வணிகம் சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும். ஆனால் கல்வி நிறுவனங்கள் இது சம்பந்தமாக விதிவிலக்கு கோர முடியாது" என்றார்.
குரு தேஜ்பகதூர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்திலுள்ள படிப்புகளின் மறுமதிப்பீடு தொடர்பாக, குரு கோபிந்த்சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகத்திடம் தகவல் உரிமை சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட விவகாரத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடையில்லா சான்றிதழுக்கான விண்ணப்பத்தை உள்ளடக்கிய ஆவணங்கள், தற்காலிக இணைப்பு மற்றும் அந்த குறிப்பிட்ட கல்வி நிறுவனம் தொடர்பான அறிவிப்பு படிவம் ஆகியவற்றை பல்கலையிடமிருந்து தகவல் உரிமை சட்டத்தின் மூலம் கேட்கப்பட்டது. ஏனெனில் அந்த குறிப்பிட்ட கல்வி நிறுவனம் மேற்கூறிய பல்கலையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஆனால் வணிக ரகசியம் மற்றும் தனிப்பட்ட தகவல் தொடர்பான விஷயங்களை தருவதற்கு குரு தேஜ்பகதூர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது. இதுதொடர்பாக மத்திய தகவல் ஆணையத்திற்கு அந்த கல்வி நிறுவனம் கூறியதாவது, "பேன் கார்டு எண்கள், ஆசிரியர்களின் தனிப்பட்ட தகவல்கள், கல்வி நிறுவனத்தின் வங்கி அறிக்கைகள் மற்றும் அதனுடைய வணிகத் தகவல்கள் போன்றவற்றை தருவதால், கல்வி நிறுவனத்தின் வணிக நலன்கள் பாதிக்கப்படும் என்றது.
அதேசமயம் இதுவிஷயமாக வழிகாட்டுதல் வழங்கியுள்ள மத்திய தகவல் ஆணையர், "வங்கி அறிக்கைகள் மற்றும் ஆசிரியர்களின் தனிப்பட்ட தகவல்கள் போன்றவற்றை நீக்கிவிட்டு, இதர தகவல்களை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
