எந்தப் படிப்பு படித்தாலும் ஐ.டி. துறையில் வேலை உண்டு
எந்தப் படிப்பு படித்தாலும் ஐ.டி. துறையில் வேலை உண்டு
UPDATED : மார் 28, 2011 12:00 AM
ADDED : மார் 28, 2011 10:38 AM
"எந்தப் படிப்பை தேர்ந்தெடுத்தாலும், தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை கிடைக்கும்" என தினமலர், எஸ்.ஆர்.எம்., இணைந்து வழங்கிய மதுரை "வழிகாட்டி" நிகழ்ச்சியில் டி.சி.எஸ். நிறுவன ஆலோசகர் கணேஷ் மகாதேவன் தெரிவித்தார்.
"தகவல் தொழில்நுட்பத் துறையில் தற்போதைய நிலை" குறித்து அவர் பேசியதாவது: தகவல் தொழில்நுட்பத் துறைக்கு (ஐ.டி.,) பிரகாசமான எதிர்காலம் உள்ளது. தற்போது இந்தியாவில் ஐ.டி. துறையில் 25 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். 2020க்குள் இன்னும் 75 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தயாராக உள்ளது.
ஆண்டுக்கு எட்டு லட்சம் பேருக்கு வேலை கொடுக்கும் அளவிற்கு மிகப் பரந்து விரிந்ததாக உள்ளது. புதிதாக இத்துறைக்கு வருபவர்களுக்கு பயிற்சியளிக்க மட்டும் 3000 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. கம்ப்யூட்டர் அறிவியல், தகவல் தொழில்நுட்பப் படிப்பு படித்தவர்கள் மட்டும் இந்த வாய்ப்பை பெற வேண்டும் என்பதில்லை. டிப்ளமோ, கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் படித்த எத்துறையைச் சேசர்ந்த மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு உள்ளது.
விரும்பிய பாடத்தை தேர்ந்தெடுக்கும் போது, அதில் மாணவர்களின் ஆர்வமும், ஈடுபாடும் அதிகமாக இருக்கும். பெற்றோர்கள் இவ்விஷயத்தில் பிள்ளைகளின் ஆர்வத்தை புரிந்து கொள்ள வேண்டும். உங்களது விருப்பத்தை திணிக்க வேண்டாம். ஆர்வமில்லாத படிப்பைத் தேர்ந்தெடுத்தால், எதிர்காலம் வீணாகிவிடும். விரும்பிய படிப்பை படித்து முடித்த பின், ஐ.டி. துறையில் வேலை பார்க்கலாம்.
விரும்பிய துறையில் சில ஆண்டுகள் வேலைபார்த்து, அதன்பின் ஐ.டி., துறையில் கால் பதிக்கலாம். அதனால், இந்த படிப்பைத் தேர்ந்தெடுத்தால் தான் வேலை கிடைக்கும் என பிள்ளைகளை வற்புறுத்தாமல், விரும்பிய படிப்பிற்கு அனுமதிக்க வேண்டும் என்றார்.
