UPDATED : மார் 29, 2011 12:00 AM
ADDED : மார் 29, 2011 05:34 PM
இளநிலை மருத்துவ படிப்பை(எம்.பி.பி.எஸ்) அதிக தரமுள்ளதாக மேம்படுத்த, எம்.பி.பி.எஸ். படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் பட்டம் பெறுவதற்கு முன்பாக, அவர்களுக்கு அறிவுத்திறன் தேர்வை நடத்த இந்திய மருத்துவ கவுன்சில் முடிவு செய்துள்ளது.
இந்த தேர்வை, படிப்பின் போதான பயிற்சி(இன்டர்ன்ஷிப்) முடிந்தபிறகு நடத்த எம்.சி.ஐ. திட்டமிட்டுள்ளது. வடிவமைக்கப்பட்டுள்ள புதிய மருத்துவ இளநிலை படிப்பு திட்டமானது, ஒரு மருத்துவ மாணவர் சிறந்த தொழில் திறமையுள்ள மருத்துவராக உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த புதிய திட்டத்தில், 2 வருடங்கள் படிக்கக்கூடிய மருத்துவ முதுநிலை படிப்பையும்(எம் மெட்) பரிந்துரைத்துள்ளது. இந்த படிப்பானது தற்போது நடைமுறையில் இருக்கும் பலதுறை மருத்துவ சிறப்பு டிப்ளமோ படிப்புகளுக்கு சமமானது.
இந்த எம் மெட் படிப்பை முடித்தப் பிறகு, மருத்துவ பட்டதாரிகள், மருத்துவ மேற்படிப்புகளான எம்.டி. அல்லது எம்.எஸ். மற்றும் எம்.டி-பிஎச்.டி, எம்.டி-எம்.எச்.ஏ, எம்.டி-டி.எம் மற்றும் எம்.டி-பெல்லோஷிப் போன்ற படிப்புகளுக்கு மருத்துவ போட்டி தேர்வுகளின் மூலம் போட்டியிட முடியும்.
