லட்சக்கணக்கில் வேலைவாய்ப்புகள்: வழிகாட்டி நிகழ்ச்சியில் தகவல்
லட்சக்கணக்கில் வேலைவாய்ப்புகள்: வழிகாட்டி நிகழ்ச்சியில் தகவல்
UPDATED : ஏப் 03, 2011 12:00 AM
ADDED : ஏப் 03, 2011 08:30 AM
'தினமலர்' நாளிதழ், எஸ்.ஆர்.எம்., பல்கலையுடன் இணைந்து, பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்காக, 'வழிகாட்டி' எனும் உயர்கல்வி குறித்த ஆலோசனை நிகழ்ச்சியை, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடத்தி வருகிறது. இந்நிகழ்ச்சியின் இரண்டாம் நாளான நேற்று, ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
'வழிகாட்டி' நிகழ்ச்சியையொட்டி நடந்த கருத்தரங்கில், 'கை நிறைய சம்பாதிக்க உதவும் சி.ஏ., ஏ.சி.எஸ்., ஐ.சி.டபிள்யூ.ஏ., படிப்புகள்' எனும் தலைப்பில், ஆடிட்டர் சேகர் பேசியதாவது:பட்டப் படிப்பிற்கு பின் தான் சி.ஏ., படிக்க வேண்டும் என்ற நடைமுறை மாறிவிட்டது. தற்போது பிளஸ் 2 முடித்தவர்களும், ஐ.சி.ஏ.ஐ., நடத்தும் தேர்வில் வெற்றி பெற்றால், சி.ஏ., படிக்கலாம். கல்லூரிகளில் இப்படிப்பு இல்லாததால், பிளஸ் 2 முடித்ததும் சி.ஏ., படிக்க விரும்பும் தங்கள் பிள்ளைகளை, பி.காம்., போன்ற இளநிலை பட்டப் படிப்புகளை பல பெற்றோர் படிக்க வைக்கின்றனர். கல்லூரிக்கு சென்று கொண்டே, தொழில் படிப்பான சி.ஏ.,வை படிப்பது சிரமம். சி.ஏ., படிக்க ஆர்வமும், தகுதியும் உள்ள மாணவர்கள், பி.காம்., பட்டப் படிப்பை தொலைதூரக் கல்வியில் படிக்கலாம்.தினமும் குறைந்தபட்சம் நான்கு மணி நேரம் திட்டமிட்டு படித்தால், சி.ஏ., தேர்வுகளில் வெற்றி பெறுவது கடினமல்ல. வரும் 2016ம் ஆண்டில் இந்தியாவிற்கு 10 லட்சம் சி.ஏ., பட்டதாரிகள் தேவைப்படுகின்றனர்.இவ்வாறு சேகர் பேசினார்.
'கம்ப்யூட்டர் ஐ.டி., துறையின் தற்போதைய போக்குகள்' குறித்து, டி.சி.எஸ்., நிறுவன உயரதிகாரி ஹேமா கோபால் பேசியதாவது: தற்போது, பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்களுக்கு மட்டுமின்றி, இ.சி.இ., சிவில்., மெக்கானிக்கல் போன்ற மற்ற பிற பிரிவுகளில் படித்தோருக்கும், பி.எஸ்சி., பட்டதாரிகளுக்கும், ஐ.டி., மற்றும் அதை சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன. அடுத்த 10 ஆண்டுகளில், ஐ.டி., மற்றும் அதை சார்ந்த துறைகளில், 75 லட்சம் பேருக்கு பணி வாய்ப்புகள் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு ஹேமா கோபால் பேசினார்.
"அனிமேஷன் மற்றும் கிராபிக் டிசைனிங் துறையில் பெருகி வரும் வேலைவாய்ப்புகள்&' எனும் தலைப்பில், எஸ்.ஆர்.எம்., பல்கலை பேராசிரியர் உன்னிகிருஷ்ணன் பேசும்போது, ""இத்துறையில் டிப்ளமோ, பட்டப் படிப்பு முடிப்போருக்கு, சினிமா, "டிவி&', இணைதள வடிவமைப்பு, இணையவழி கல்வி போன்ற துறைகளில் வேலைவாய்ப்புகள் நிறைய உள்ளன. எதிர்காலத்தில் இந்தியாவில், அனிமேஷன் மற்றும் கிராபிக் டிசைனிங் துறையில், மூன்று லட்சம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது,&'&' என்றார்.
"கணினி அறிவியலின் எதிர்காலம்&' குறித்து எஸ்.ஆர்.எம்., பல்கலை விரிவுரையாளர் ஸ்ரீமதி பேசும்போது, ""வங்கி, காப்பீடு, சுற்றுலா, கல்வி, தொலைத்தொடர்பு, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், கம்ப்யூட்டர் பட்டப் படிப்பு முடித்தோருக்கு நிறைய வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள, மாணவர்கள் முழு ஈடுபாட்டுடன் படிக்க வேண்டும். அதோடு அவர்கள், தங்களின் படைப்பாற்றல், ஆங்கில அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்,&'&' என்றார்.
"மொழிகள் கற்றால் எதிர்காலம்&' எனும் தலைப்பில் பேராசிரியர் ஞானசம்பந்தன் பேசும்போது, ""பி.ஏ., பட்டதாரிகள் கூடுதலாக பி.எட்., பிஎச்.டி., முடித்தால், பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களாக பணியாற்றலாம். மொழி புலமை உள்ளவர்களுக்கு, பத்திரிகைகள், "டிவி&', சினிமா, ரேடியோ, பதிப்புத் துறை போன்றவற்றில் நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன,&'&' என்றார்.
இந்நிகழ்ச்சியையொட்டி, எஸ்.ஆர்.எம்., பல்கலை, வேல்ஸ் பல்கலை, ராஜலட்சுமி இன்ஜினியரிங், பிராங்க்பின் விமான பணிப்பெண்கள் பயிற்சி நிறுவனம் உள்ளிட்ட 95 உயர்கல்வி நிறுவனங்கள், "ஸ்டால்&'கள் அமைத்துள்ளன. இந்நிறுவனங்களில் உள்ள படிப்புகள் குறித்த விவரங்களை மாணவர்கள் ஆர்வமுடன் கேட்டறிந்தனர்.முன்னதாக, "எந்த கல்லூரியில் என்ன படிப்பு உள்ளது?&' என்ற வழிகாட்டி புத்தகம், மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
