பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு : மே முதல் வாரத்தில் ரிசல்ட்
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு : மே முதல் வாரத்தில் ரிசல்ட்
UPDATED : ஏப் 11, 2011 12:00 AM
ADDED : ஏப் 11, 2011 10:57 AM
தமிழகத்தில், 40க்கும் மேற்பட்ட மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி, மார்ச் 23ம் தேதி துவங்கியது.ஏப்ரல் 13ல், தமிழக சட்டசபை தேர்தல் நடப்பதால், ஏப்ரல் 11ம் தேதிக்குள் விடைத்தாள் திருத்தும் பணிகளை கண்டிப்பாக முடிக்க வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டிருந்தது.
பெரும்பாலான மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி ஓரிரு நாட்களுக்கு முன்பே முடிக்கப்பட்டு விட்டது. சில மையங்களில் இன்றுடன் பணி நிறைவு பெறுகிறது.
விடைத்தாள் திருத்திய விவரங்கள், சென்னையில் ஒருங்கிணைக்கப்பட்டு, தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு பணிகள் துவங்கப்பட உள்ளன.
மே மாதம் முதல்வாரத்தில், தேர்வு முடிவுகளை வெளியிட, அரசு தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் முடிவு, மே 13ம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து, புதிய ஆட்சிக்கான பரபரப்பு நீடிக்கும் என்பதால், தேர்தல் முடிவு வெளிவரும் முன்பே, பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
