மருத்துவக் கல்வி சேர்க்கை - உச்ச நீதிமன்றம் கடுங்கோபம்
மருத்துவக் கல்வி சேர்க்கை - உச்ச நீதிமன்றம் கடுங்கோபம்
UPDATED : ஏப் 11, 2011 12:00 AM
ADDED : ஏப் 11, 2011 01:51 PM
மருத்துவக் கல்வியில் சேர்க்கைக்கு, நுழைவுத் தேர்வு மட்டுமே சிறந்த வழியாகும். நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சேர்க்கை இடம் என்பதை கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி. சுதர்சன் ரெட்டி, எஸ்.எஸ். நிஜார் தெரிவித்துள்ளனர்.
ஜெய்ப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மருத்துவக் கல்லூரியில், ராஜஸ்தான் மருத்துவ நுழைவுத் தேர்வு (ஆர்.பி.எம்.டி.) எழுதாத 6 மாணவர்களுக்கு சேர்க்கை நடைபெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு வெள்ளிக்கிழமையன்று விசாரணைக்கு வந்தது.
அதில், மாணவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வேணுகோபால், இந்த வழக்கினால் 6 மாணவர்களது வாழ்க்கையும் கேள்விக்குறியாகியுள்ளது. மேலும், மருத்துவக் கல்லூரியில் 6 சேர்க்கை இடங்களும் வீணாகியுள்ளது என்று குறிப்பிட்டார்.
அப்போது பதிலளித்த நீதிபதிகள், விதிமுறைகளை மீறி, நுழைவுத் தேர்வே எழுதாத மாணவர்களை மருத்துவக் கல்வி நிறுவனத்தில் சேர்த்திருப்பது குறித்து கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், மிகச் சாதாரணமாக விதிமுறைகள் மீறப்பட்டு, சேர்க்கை விடங்கள் பணத்திற்காக விற்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மருத்துவக் கல்வியில் சேருவதற்கு பிளஸ் 2 தேர்ச்சியே தகுதியானது என்று மாணவர்கள் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் கூறினார்.
இது குறித்து இந்திய மருத்துவக் கவுன்சிலின் முடிவைப் பெற வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர் நீதிபதிகள்.
