UPDATED : ஏப் 12, 2011 12:00 AM
ADDED : ஏப் 12, 2011 10:08 AM
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எளிதாக இருந்ததால் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என ஆசிரியர்களும், மாணவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மதுரை கல்லூரி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.செந்தூரன் கூறியதாவது, "பொதுவாக பத்தாம் வகுப்பு தேர்வு சராசரிக்கும் கீழ் உள்ள மாணவர்களும் தேர்ச்சி பெறலாம் என்ற அளவில் இருந்தது. நன்கு படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவர். தமிழ்த் தேர்வில் கடந்த ஆண்டுகளில் கேட்டிருந்த வினாக்களே வந்திருந்தன. இலக்கணம் எளிமையாக இருந்தது.
ஆங்கிலம் முதல்தாளில் எதிர்பார்த்த கட்டுரை வினாக்கள் மற்றும் மூன்று மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தன. இரண்டாம் தாளில் இலக்கணம் கொஞ்சம் கஷ்டமாக இருந்துள்ளது. ஆனால் கடிதம், மொழிபெயர்ப்பு எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். கணிதப் பாடத்தில் காரணிப்படுத்துதலை கேட்காததால் சாதாரண மாணவர்கள் சிரமப்பட்டனர்.
அறிவியல் பாடத்தில் விலங்கியல் பகுதி வினாக்கள் சிரமத்தை தந்தன. அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் இம்முறை வரவில்லை. உயிரியல் பகுதியில் ஐந்து மதிப்பெண் வினா சற்று கஷ்டமாக இருந்தது. சமூக அறிவியலில் ஒரு மதிப்பெண் வினாக்களில் பெரும்பாலும் ஆண்டுகளை குறிப்பிடும் வினாக்களே இருந்ததால் பல மாணவர்கள் சிரமமாக உணர்ந்தனர்" என்றார்.
