UPDATED : ஏப் 16, 2011 12:00 AM
ADDED : ஏப் 16, 2011 11:46 AM
தஞ்சாவூர்: உலக பொருளாதார மந்தநிலை இந்தியாவிற்கு சாதகமாகவே இருந்துள்ளது என்று டி.சி.எஸ். மேலாண்மை இயக்குனர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சை சாஸ்திரா பல்கலையில் ஒரு விழாவில் பேசிய அவர், "நெருங்கி வரும் காலங்களில், சர்வதேச அளவில் வேலை வாய்ப்பை பெறும் 10 நபர்களில், 6 பேர் இந்தியர்களாக இருப்பார். பொருளாதார மந்த நிலையின்போது இந்திய பொருளாதாரம் நல்ல மாற்றங்களைக் கண்டது. மேலும் நாட்டில் பல தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் நிகழப்போகிறது என்ற குறிப்பையும் உணர்த்தின.
இந்தியா சிறந்த மென்பொருள் கட்டமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் ஒருங்கிணைந்த டிஜிட்டல் தகவல் துறையில் உலகின் முதல்நிலை நாடாக இந்தியா உருவாகும். தற்போதைய நிலையில் இந்திய பொருளாதாரம் நல்ல வளர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளது. அடுத்த 10 முதல் 12 ஆண்டுகளில் வளர்ச்சி விகிதம் 10 சதவீதத்தை எட்டும்.
வரும் காலங்களில் இந்த உலகமானது, பொருளாதார சூழல், வயதானவர்களின் பெருக்கம், வெளியேற்ற பிரச்சினைகள், அரசியல் சிக்கல்கள் மற்றும் தீவிரவாதம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும். நுகர்வோர் செயல்பாட்டின் அடிப்படையிலேயே உலகின் வளர்ச்சி இருந்தது. இந்தியா போன்ற நாட்டின் வளர்ச்சிக்கு நல்ல உள்கட்டமைப்பு வசதிகள் தேவை. அதற்காக பெரிய நிதி ஆதாரங்களும் வேண்டும்" என்றார்.
