மேல்முறையீடு செய்த பள்ளிகளுக்கு மே இறுதிக்குள் புதிய கட்டணம்
மேல்முறையீடு செய்த பள்ளிகளுக்கு மே இறுதிக்குள் புதிய கட்டணம்
UPDATED : ஏப் 20, 2011 12:00 AM
ADDED : ஏப் 20, 2011 10:06 AM
புதிய கட்டணம் நிர்ணயிக்கக்கோரி, மேல் முறையீடு செய்துள்ள 6,400 தனியார் பள்ளிகளுக்கும் புதிய கட்டணத்தை நிர்ணயித்து, மே மாத இறுதியில் அறிவிக்கப்படும் என, கட்டண நிர்ணயக்குழு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் பலவாறாக வசூலிக்கப்படும் கட்டணங்களை முறைப்படுத்தி, நியாயமான கட்டணங்களை நிர்ணயிக்க அரசு நடவடிக்கை எடுத்தது.
சென்னை ஐகோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கட்டண நிர்ணயக்குழு அமைத்து, அரசு உத்தரவிட்டது. கோவிந்தராஜன் குழு வெளியிட்ட கட்டணம், பெரும்பாலான பள்ளிகள் ஏற்காததால் பல பிரச்னைகள் ஏற்பட்டன. இதையடுத்து, தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, ஓய்வுபெற்ற மற்றொரு நீதிபதி ரவிராஜ பாண்டியனை, குழுத் தலைவராக அரசு நியமித்தது. இதற்கிடையே, புதிய கட்டணம் நிர்ணயிக்கக்கோரி, 6,400 பள்ளிகள், குழுவிடம் மேல் முறையீடு செய்தன. நவம்பர் முதல் தேதியில் ரவிராஜ பாண்டியன் பொறுப்பேற்றதும், மாவட்ட வாரியாக பள்ளி நிர்வாகிகளை அழைத்து விசாரணை நடத்தி வந்தார்.
ஆறு மாதங்களாக நடந்து வரும் விசாரணை, தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. "தற்போது, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. இதையடுத்து, திருவள்ளூர், இறுதியாக சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடக்கிறது. இது முடிந்ததும், மேல் முறையீடு செய்த அனைத்துப் பள்ளிகளுக்கும் புதிய கட்டணத்தை நிர்ணயித்து, மே இறுதிக்குள் அறிவித்துவிடுவோம் என, குழுவின் சிறப்பு அலுவலர் திருஞானசம்பந்தம் தெரிவித்தார்.
பணிகள் முடிந்ததும், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பிரதிநிதிகளை சென்னைக்கு அழைத்து, புதிய கட்டணங்கள் அடங்கிய பட்டியல் ஒப்படைக்கப்படும். மேலும், புதிய கட்டண விவரங்களை, பள்ளிக் கல்வித்துறை இணையதளத்திலும் வெளியிட திட்டமிட்டிருப்பதாக, குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
