UPDATED : ஏப் 20, 2011 12:00 AM
ADDED : ஏப் 20, 2011 12:34 PM
அறிவை உருவாக்கவும், வழங்கவும் அதிகளவில் திறமையான மற்றும் படித்த இளைஞர்கள் நாட்டிற்கு தேவை என்று முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் தெரிவித்துள்ளார்.
பள்ளி ஆசிரியர்களுக்கான ஒரு கருத்தரங்கை தொடங்கிவைத்து பேசிய கலாம், "ஒவ்வொரு ஆண்டும் இளநிலை மற்றும் முதுநிலை படிப்பில் 30 லட்சம் பட்டதாரிகள் உருவாகிறார்கள். மேலும் 10 மற்றும் 12 ம் வகுப்பு முடித்துவிட்டு, வேலை தேடும் இளைஞர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு 70 லட்சம். ஆகமொத்தம், ஒவ்வொரு ஆண்டும் வேலை தேடும் பட்டாளத்தில் மொத்தம் 1 கோடி மாணவர்கள் இணைகிறார்கள்.
இந்த 21 ம் நூற்றாண்டில், உயர்கல்வி கற்ற திறன்வாய்ந்த இளைஞர்கள் அதிகளவில் நாட்டிற்கு தேவை. அவர்களால்தான், அறிவை பெறுதல், அறிவை வழங்குதல், அறிவை உருவாக்குதல் மற்றும் அறிவை பகிர்தல் போன்ற விஷயங்களை மேற்கொள்ள முடியும். இந்தியாவில் திறன்வாய்ந்த பணியாளர்கள் கிடைப்பதில் மிகப்பெரிய இடைவெளி நிலவுகிறது.
பள்ளியானது மிகவும் முக்கியம், ஏனெனில், மாணவர்களை தன்னம்பிக்கை உள்ளவர்களாய் அது உருவாக்குகிறது. பள்ளிக்கும், பள்ளியின் பாடத்திட்டத்திற்கும் இடையே ஒரு இணைப்பு தேவை" என்றார்.
