UPDATED : ஏப் 23, 2011 12:00 AM
ADDED : ஏப் 23, 2011 10:25 AM
சிவகங்கை: பள்ளிகளுக்கு வழங்க, 6.91 கோடி பாடப்புத்தகங்கள் தயாராகி வருகின்றன. இவை மே இறுதியில், மாணவர்களுக்கு வழங்கப்படும்.
தமிழகத்தில் 29 ஆயிரத்து 388 துவக்கப்பள்ளிகள், 8,377 நடுநிலைப் பள்ளிகள், 3,425 உயர்நிலைப் பள்ளிகள், 3,050 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இது தவிர 3,600 மெட்ரிக் பள்ளிகளும் இயங்குகின்றன. ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 1.25 கோடி மாணவர்கள் படிக்கின்றனர்.
இலவச புத்தகம் தயார்: கடந்த கல்வி ஆண்டில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பில் சமச்சீர் கல்வி முறை அமலானது. வரும் ஆண்டில், 10ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இவற்றிற்கான தமிழ், ஆங்கில வழி புத்தகங்கள் அச்சிடும் பணிகள் 75 சதவீதம் முடிந்து விட்டன. மீதி புத்தகங்கள் இன்னும் ஒரு மாத காலத்தில் அச்சிடப்படும். ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு, 1.33 கோடி, இரண்டு முதல் 10ம் வகுப்பு வரை 5.58 கோடி புத்தகங்கள் தேவை. இதில் 92 லட்சத்து 30 ஆயிரம் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும். மற்றவை தனியார் பள்ளிகளுக்கானவை.
வினியோகம்: சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி துவங்கியுள்ளது. சட்டசபை தேர்தல் முடிவு வெளியானவுடன் புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்படும். மே இறுதியில் இலவச புத்தகங்களை மாணவர்கள் பெறலாம். ஜூன் 1ம் தேதி பள்ளிகளுக்கு மாணவர்கள் பாடப் புத்தகங்களுடன் வர வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
