UPDATED : ஏப் 23, 2011 12:00 AM
ADDED : ஏப் 23, 2011 11:42 AM
லண்டனில் உள்ள கான்சாஸ் மருத்துவ மைய பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில், சிறு வயதிலேயே இசைக் கருவிகளை வாசிக்கும் பயிற்சியை அளிக்கும் குழந்தைகள், இசைத் துறையில் மட்டும் மிளிர்வதில்லை. அவர்களது மூளை அபரிமிதமாக வளர்ந்து, பல்வேறு துறைகளில் சாதனையாளர்களாக மாறுகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
இளஞ்சிறார்களாக இருக்கும் போதே, பியானோ, ப்ளுட், புல்லாங்குழல் போன்ற இசைக் கருவிகளை வாசிக்க பயிற்சி எடுத்துக் கொள்பவர்கள், பெரியவர்களாக ஆகும் போது மற்றவர்களை விட, புத்திசாலிகளாக இருப்பதாக ஆய்வுக் கூறுகிறது.
இசைக் கருவிகளை வாசிக்கும் போது, நமது மூளை உற்சாகமடைகிறது. அதன் மூலம் மூளையின் திறன் அதிகரிக்கிறது. இதனால், இசைக் கருவிகளை வாசிக்கப் பழகும் குழந்தைகள், வாழ்க்கையில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் அளவிற்கு திறன் பெற்றதாக உள்ளனர் என்று ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் மருத்துவர் பிரென்டா ஹன்னா பிளேடி கூறுகிறார்.
இசைக் கருவிகளை பல ஆண்டுகளாக தொடர்ந்து இசைத்து வருவதன் மூலம், நமது மூளை, தொடர்ந்து உற்சாகத்தில் இருப்பதால், வயதான தோற்றத்தை அடைவது தள்ளிப்போடப்படுகிறது. மூளையின் செயல் நாளுக்கு நாள் அதிகரிக்குமேத் தவிர, வயதானதன் காரணமாக மூளையில் ஏற்படும் தொய்வு என்பதே ஏற்படாமல் தவிர்க்கப்படுகிறது என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இசைக் கருவிகளை வாசிப்பதால் நன்மைகள் உண்டு என்பது பல்வேறு ஆய்வுகளால் அறியப்பட்டாலும், குழந்தைகளுக்கு ஏற்படும் பயன்பாடு குறித்து மிகவும் ஆழமாக இந்த ஆய்வு நிரூபித்துள்ளது.
60 முதல் 83 வயதான 70 பெரியவர்கள், இசைக் கருவிகளை வாசித்தவர்கள், இசைக் கருவிகளை வாசிக்காதவர்கள் என இரு பிரிவாக பிரித்து நடத்தப்பட்ட ஆய்வில், இசைக் கருவிகளை வாசித்தவர்களிடம் உற்சாகமும், செயல் திறனில் வேகமும் இருந்தது தெரிய வந்துள்ளது.
மேலும், புதிய விஷயங்களை மூளை ஏற்றுக் கொள்ளும் வேகமும் இசைக் கருவிகளை வாசித்த பெரியவர்களிடம் அதிகமாக இருந்ததும், சவால்களை எதிர்கொள்ளும் திடமும் காணப்பட்டது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல், இசைக் கருவிகளை பல ஆண்டுகளாக வாசித்தவர்களுக்கு மூளைத் தொடர்பான நோய்கள் வருவதே இல்லை என்பதும் தெளிவாகியுள்ளது.
இதன் மூலம், தொடர்ந்து ஏதேனும் ஒரு இசைக் கருவியை வாசிப்பதால், மூளையை உற்சாகமாக வைத்துக் கொள்ளவும், நோயற்ற வாழ்க்கையை வாழவும், முதுமையை தள்ளிப் போடவும் முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்த கருத்தாகும்.
வெறும் இசைக் கருவியை வாசிக்க பயிற்சி எடுப்பது மட்டும் மூளையின் செயல்பாட்டை மாற்றி விடாது. தொடர்ந்து வாசிப்பதுதான் மூளைக்கு உற்சாகமூட்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று ஹன்னா பிளேடி தெரிவித்துள்ளார்.
