மாணவர் சேர்க்கை குறித்து கால்நடை மருத்துவ பல்கலை அறிவிப்பு
மாணவர் சேர்க்கை குறித்து கால்நடை மருத்துவ பல்கலை அறிவிப்பு
UPDATED : ஏப் 24, 2011 12:00 AM
ADDED : ஏப் 24, 2011 12:03 PM
சென்னை: தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை, வரும் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கால்நடை மருத்துவம், மீன் வளம், உணவு பதனிடும் தொழில் நுட்பம் மற்றும் கோழியின உற்பத்தி தொழில்நுட்ப 2011-12ம் ஆண்டு பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்க்கை குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. மே மாதம் 2ம் தேதி முதல் விண்ணப்பங்கள் கிடைக்கும். அதற்கான விளம்பரம் மே 1ம் தேதி வெளியாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை ஜூன் 7ம் தேதி மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி மீன்வள கல்லூரி, மதுரை, கோவை, ராஜபாளையம், வேலூர் ஆகிய ஊர்களில் உள்ள கால்நடை மருத்துவ ஆராய்ச்சி பல்கலை மற்றும் பயிற்சி நிலையங்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும். இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு, இளநிலை மீன்வள பட்ட படிப்புகளில் சேர்க்கைக்காக உள்ள இடங்கள் தவிர, வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ.,), வெளிநாட்டினர், காஷ்மீரில் இருந்து புலம் பெயர்ந்தவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
விண்ணப்ப படிவங்கள் அனுப்பும் வழிமுறைகள் குறித்து தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது 044-25551586/87 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
