UPDATED : ஏப் 27, 2011 12:00 AM
ADDED : ஏப் 27, 2011 05:52 PM
சென்னை: தனியார் பள்ளிகளிடம், கட்டண விவகாரம் தொடர்பாக கட்டண நிர்ணயக்குழு நடத்தி வந்த விசாரணை இன்றுடன் முடிகிறது.
புதிய கட்டண விவரம் மே 20ம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டண நிர்ணயக் குழு முதலில் நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை உயர்த்தி அறிவிக்கக் கோரி, 6,400 தனியார் பள்ளிகள் மேல் முறையீடு செய்தன. இந்த பள்ளிகளின் பிரதிநிதிகளிடம், கடந்த ஆறு மாதங்களாக விசாரணை நடந்தது. பள்ளிகளின் செலவு மற்றும் வருவாய் விவரங்களையும், எதிர்பார்க்கும் புதிய கட்டணங்களையும் குழு கேட்டறிந்தது.
இதனடிப்படையில், புதிய கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, ஆறு மாதங்களாக நடந்து வந்த விசாரணை இன்றுடன் முடிகிறது. சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி நிர்வாகிகளிடம் இன்று விசாரணை நடக்கிறது. இதையடுத்து, ஏற்கனவே அழைப்பு விடுத்தும் விசாரணையில் பங்கேற்காத பள்ளிகளுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தரும் வகையில் அவர்களை மே இரண்டாம் தேதியும், மாநிலம் முழுவதும் உள்ள 42 ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளின் நிர்வாகிகளை மே மூன்றாம் தேதியும் சந்திக்க, குழு திட்டமிட்டுள்ளது.
அத்துடன், விசாரணை பணிகள் நிறைவுபெறும். இதன்பின், பள்ளிகள் தந்த வரவு - செலவு விவரங்ளை 20 பேர் கொண்ட ஆடிட்டர்கள் குழு ஆய்வுசெய்து புதிய கட்டணங்களை நிர்ணயிக்கும். இந்தப் பணிகள் மே 15க்குள் முடிந்துவிடும் என்றும், 20ம் தேதிக்குள் புதிய கட்டண விவரங்கள், பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
