UPDATED : ஏப் 27, 2011 12:00 AM
ADDED : ஏப் 27, 2011 11:52 AM
டெல்லி: வரும் 12 வது ஐந்தாண்டு திட்டத்தில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக இந்தியா 2 மடங்கு செலவிட உள்ளது.
இத்தகவலை, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை இணையமைச்சர் அஷ்வானி குமார் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது, "12 வது ஐந்தாண்டு திட்டத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவிடப்பட உள்ளது. இந்த தொகையானது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0௦.6 % ஆகும்.
உலகின் மூன்றாவது பெரிய வளரும் பொருளாதாரம் என்ற வகையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் இந்தியா இன்னும் முன்னேற வேண்டியுள்ளது. ப்யூர் சயின்ஸ், அப்ளைட் சயின்ஸ் மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றை நோக்கி, மக்கள் ஊக்குவிக்கப்படுவார்கள். தற்போது அறிவியல்-தொழில்நுட்ப துறையில் மாணவர்களுக்கு ஆர்வம் போய்விட்டது. ஆனால் அதை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாணவர்கள் மத்தியில் அறிவியலை பிரபலமாக்க, உயர்கல்வி நிறுவனங்களை, பள்ளிகள் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், அறவியல் மாணவர்களுக்கான உதவித்தொகையை ரூ.640 கோடியிலிருந்து, ரூ.3000 கோடியாக, அடுத்த 5 ஆண்டுகளில் அதிகரிக்க அரசு திட்டமிடுகிறது" என்றார்.
