பள்ளிக் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து : ஆசிரியர் கூட்டணி
பள்ளிக் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து : ஆசிரியர் கூட்டணி
UPDATED : மே 02, 2011 12:00 AM
ADDED : மே 02, 2011 10:53 AM
குழந்தைகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்காத பள்ளிகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தெரிவித்துள்ளது.
கோவை உள்பட தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தனியார் நர்சரி, பிரைமரி பள்ளிகள் செயல்படுகின்றன. கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பச்சிளங்குழந்தைகள் கருகி பலியான பின்பே அரசு அதிகாரிகள் விழித்தனர்.
குழந்தைகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அரசும் எச்சரித்தது. இந்த அறிவிப்பை வெளியிட்டு ஆண்டுகள் பல ஆனபோதும், இன்னும் பல பள்ளிகள் பாதுகாப்பற்ற முறையில்தான் செயல்பட்டு வருகின்றன. நடவடிக்கை எடுக்க வேண்டிய மாவட்ட துவக்கப்பள்ளி அலுவலர்கள், ஆய்வு செய்யும் பொறுப்பை உதவி கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்கின்றனர்.
பள்ளி நிர்வாகங்களால், கவனிக்கப்படும் உதவி கல்வி அலுவலர்கள், குறைகளை மறைத்து தவறான அறிக்கையை மேலிடத்துக்கு சமர்ப்பிக்கின்றனர். இதை கண்டித்து, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, அதன் செயலாளர் கணேசன் கூறியதாவது : அரசு விதிமுறைகளின்படி உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தாத பள்ளிகள் தொடர்ந்து இயங்க, வரும் கல்வியாண்டிலாவது தடை விதிக்க வேண்டும்.
பள்ளிகளில் ஆய்வு நடத்தும் பொறுப்பை உதவி கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்காமல், இதற்கென கல்வியாளர்கள் அடங்கிய குழுவை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் மட்டுமே தரமற்ற பள்ளிகளை அடையாளம் காண முடியும். கும்பகோணம் பள்ளி தீ விபத்துக்கு பின்பும் வசதியற்ற பள்ளிகளை தொடர்ந்து இயங்க அனுமதிப்பது, மற்றொரு விபத்து ஏற்பட வழிவகுத்து விடும்.
இது போன்ற பள்ளிகளை தொடர்ந்து இயங்க அனுமதித்தால், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். கல்வித் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த கல்வியாளர்கள் சேர்ந்து விவாதித்து சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தை வடிவமைத்துள்ளனர். மாணவர்களின் வயது மற்றும் கற்கும் திறனின் அடிப்படையிலும், மனோதத்துவ நிபுணர்களின் வழிகாட்டுதலின்படியும் இப்பாடத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
நடைமுறை வாழ்க்கைக்கு தேவையான தகவல்களுக்கு முக்கியத்துவம் அளித்து பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுவரை கடினமான பாடச்சுமையால் திணறி வந்த மாணவர்கள் இனி எளிதாக படித்து வெற்றி பெறலாம். இதனால் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்குமே தவிர, குறையாது.
சமச்சீர் கல்வியை தரமற்றது என குறை கூறும் தனியார் பள்ளிகள், குறைகளை விளக்கி அவற்றை நீக்க கோரிக்கை வைக்கலாம். அதை விடுத்து, சி.பி.எஸ்.இ. கல்வி முறைக்கு மாற அனுமதி அளிப்பது, அதிக கட்டண வசூலுக்கு மற்றொரு வாய்ப்பை அரசே ஏற்படுத்தி தருவது போலாகி விடும். இப்பள்ளிகளுக்கு அனுமதி வழங்க மறுத்துள்ள மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரின் அறிவிப்பு பாராட்டத்தக்கது. முறையான உள்கட்டமைப்பு வசதியுள்ள பள்ளிகளின் விவரங்களை, வெப்சைட்டில் தாமதிக்காமல் வெளியிட வேண்டும். இது போன்ற வெளிப்படையான நடவடிக்கைகளின் மூலம் மட்டுமே, மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய முடியும். இவ்வாறு, கணேசன் கூறினார்.
