காஞ்சி மாணவ, மாணவியர் வில்வித்தை போட்டிக்கு தேர்வு
காஞ்சி மாணவ, மாணவியர் வில்வித்தை போட்டிக்கு தேர்வு
UPDATED : பிப் 23, 2026 11:52 AM
ADDED : பிப் 23, 2026 11:55 AM

வாலாஜாபாத்:
தெற்காசிய அளவிலான வில்வித்தை போட்டியில் அசத்திய, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 மாணவ, மாணவியர் ஆசிய அளவிலான அடுத்த சுற்றுக்கு தேர்வாகி உள்ளனர்.
தமிழ்நாடு பாராம்பரிய வில்வித்தை சங்கம் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்கும் மாநில அளவிலான வில்வித்தை போட்டி, திண்டுக்கல்லில் கடந்த அக்டோபர் மாதம் நடந்தது.
இதில், தமிழக, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இருந்து, 320 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஹெல்த் ஸ்போர்ட்ஸ் அகாடமி குழுவினர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் கல்யாணசுந்தரம் அவர்களது ஒருங்கிணைப்பில் காஞ்சிபுரம், நாய்க்கன்பேட்டை, வாலாஜாபாத் மற்றும் சாலவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இதில், 16 மாணவ, மாணவியர் தேர்வாகி கடந்த மாதம் ஹைதராபாத்தில் நடந்த தேசிய அளவிலான வில்வித்தை போட்டிக்கு தகுதி பெற்று தங்கம், வெள்ளி வென்றனர்.
அதை தொடர்ந்து, கடந்த 15ம் தேதி, கோவாவில் துவங்கிய தெற்காசிய அளவிலான வில்வித்தை போட்டியில் பங்கேற்ற காஞ்சிபுரம் மாவட்ட மாணவர்களில், 12 பேர் அடுத்த சுற்றுக்கு முன்னேறி நேற்று முன்தினம் வீடு திரும்பினர்.
இவர்கள், மே மாதம் மலேசியா அல்லது தாய்லாந்தில் நடத்த திட்டமிட்டுள்ள ஆசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளதாக காஞ்சிபுரம் ஹெல்த் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

