தேசிய விண்வெளி சந்தையில் கர்நாடகா 40 சதவீதம் இலக்கு
தேசிய விண்வெளி சந்தையில் கர்நாடகா 40 சதவீதம் இலக்கு
UPDATED : செப் 21, 2024 12:00 AM
ADDED : செப் 21, 2024 07:15 AM
பெங்களூரு:
தேசிய விண்வெளி சந்தையில் கர்நாடகா 40 சதவீதம் பங்களிப்பு அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, என ஐ.டி., பி.டி., துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்தார்.
துமகூரு சாலை, மாதாவரத்தில் உள்ள பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில், இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், 8வது விண்வெளி கண்காட்சியை, ஐ.டி., பி.டி., துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, நேற்று துவக்கி வைத்து பேசியதாவது:
விண்வெளி தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் மேம்பாட்டிற்கு, கர்நாடக அரசு தயாராக உள்ளது. விண்வெளி துறையில் உந்து சக்தியாக மாநிலம் உருவெடுத்துள்ளது. முதலீடு மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதில் அரசு கவனம் செலுத்துகிறது.
தேசிய சந்தையில் மாநிலம் சார்பில், விண்வெளி துறையில் 40 சதவீதம் பங்களிப்பு அளிக்க குறி வைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, 17 பில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மதிப்பை உருவாக்குவதை நாங்கள் இலக்காக வைத்துள்ளோம். கர்நாடகாவை விண்வெளி தொழில்நுட்ப மையமாக உருவாக்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம்.
பெங்களூரை சேர்ந்த, ஸ்பேஸ்டெக் என்ற நிறுவனம், சமீபத்தில் நாசாவுடன் இணைந்து 476 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டுக்கு ஒப்பந்தம் போட்டது. நம் நாட்டின் விண்வெளி இலக்குகளை அடைய, இந்த விண்வெளி கண்காட்சி வாய்ப்பளிக்கிறது.
சந்திரயான் 3
இன்றும், நாளையும் விண்வெளி கண்காட்சி நடக்கிறது. கேரள தொழில் துறை அமைச்சர் ராஜீவ் இன்று உரையாற்றுகிறார். இஸ்ரோ, ஐ.ஐ.எஸ்., உட்பட நாட்டின் வெவ்வேறு விண்வெளி தொழில் துறை முக்கியஸ்தர்கள், விஞ்ஞானிகள் கருத்தரங்கில் பங்கேற்று பேசுகின்றனர். கண்காட்சியில், மொத்தம் 154 ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளன.
ஓசூர் வழித்தடம்
தமிழகத்தில் ஐந்து ராணுவ தொழில்துறை வழித்தட முனையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், பெங்களூரை ஒட்டியுள்ள கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகரமும் ஒன்று. இங்கு ராணுவ உபகரணங்கள் தயாரிக்கும் வகையில் ராணுவ வழித்தட முனையம் அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், வேலை வாய்ப்பு பெருகும். ஓசூரில் இருந்து, பெங்களூரு வந்து செல்லும் மக்களுக்கு அங்கேயே வேலை கிடைக்கும்.