UPDATED : டிச 10, 2024 12:00 AM
ADDED : டிச 10, 2024 10:11 AM
கோவில்பாளையம்:
ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சார்பில், சிறந்த ஊராட்சிகளுக்கு தீன்தயாள் உபாத்தியாயா பஞ்சாயத்து விகாஸ் புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது.
இதில் உள்கட்டமைப்பில் தன்னிறைவு பெற்ற ஊராட்சி, பெண்களுக்கு உரிமை பெற்ற ஊராட்சி என ஒன்பது பிரிவுகளில் தலா மூன்று ஊராட்சிகள் தேர்வு செய்யப்படுகின்றன.
முதலிடம் பெறும் ஊராட்சிக்கு ஒரு கோடி ரூபாய், இரண்டாம் இடத்தில் உள்ள ஊராட்சிக்கு 75 லட்சம், மூன்றாம் இடத்தில் உள்ள ஊராட்சிக்கு 50 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் உள்கட்டமைப்பில் தன்னிறைவு பெற்றதற்கான பிரிவில், கோவை மாவட்டம், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தைச் சேர்ந்த கீரணத்தம் ஊராட்சி தேசிய அளவில் முதல் இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மகளிருக்கு அதிக பணிகள் செய்த பிரிவில் தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த வரகனூர் ஊராட்சி தேசிய அளவில் மூன்றாம் இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. கீரணத்தம் ஊராட்சிக்கு ஒரு கோடி ரூபாயும், வரகனூர் ஊராட்சிக்கு 50 லட்சம் ரூபாயும் வழங்கப்படுகிறது.
இதற்கான விருதை வருகிற 11-ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்க உள்ளார்.
இந்நிகழ்ச்சிக்காக எஸ்.எஸ்.குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் தனலட்சுமி, கீரணத்தம் ஊராட்சி தலைவர் பழனிச்சாமி, ஊராட்சி செயலர் பாலாஜி ஆகியோர் நேற்று மதியம் விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றனர்.