மாற்றுத்திறனாளி மாணவர்களை விளையாட்டில் ஊக்குவிக்கும் கேரளா
மாற்றுத்திறனாளி மாணவர்களை விளையாட்டில் ஊக்குவிக்கும் கேரளா
UPDATED : ஜூலை 07, 2024 12:00 AM
ADDED : ஜூலை 07, 2024 10:31 PM
திருவனந்தபுரம்:
கேரள பள்ளிக் கல்வித் துறை மாற்றுத்திறனாளி மாணவர்களின் விளையாட்டு திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், நாட்டிலேயே முதல்முறையாக அவர்களுக்கு என்று தனித்துவ விளையாட்டு கையேட்டை உருவாக்கியுள்ளது.
கேரளாவில், மார்க்சிஸ் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
விளையாட்டு கையேடு
இங்குள்ள பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களை விளையாட்டுகளில் அதிகளவில் ஈடுபடுத்துவதற்காக, தனித்துவமான விளையாட்டு கையேட்டை பள்ளிக் கல்வித் துறை வடிவமைத்து இருப்பதாக மாநில கல்வி அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறமைகளை ஊக்குவித்து, அவர்களின் பங்கேற்பை உறுதி செய்யும் நோக்கத்துடன், கேரள கல்வித் துறை தனித்துவமான விளையாட்டு கையேட்டை வடிவமைத்துள்ளது. இது போன்ற ஆவணம் வடிவமைக்கப்படுவது நாட்டில் இதுவே முதல் முறை.
இந்த ஆண்டே கையேட்டின் ஒரு பகுதியாக போட்டிகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான அனைத்தையும் உள்ளடக்கிய கல்வி திட்டத்தின் ஒரு பகுதியாக மொத்தம் 121.21 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
எர்ணாகுளம் மாவட்டத்தில் பள்ளி ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் அக்டோபர் 18 முதல் 22 வரை நடக்க உள்ளன. பள்ளி விளையாட்டுப் போட்டிகளை ஒலிம்பிக் போட்டியின் மாதிரியாக மாற்றும் முயற்சிகள் நடந்து வருகின்றன. நிகழ்ச்சிக்கான சிறப்பு லோகோ, தீம் மற்றும் பாடல் பரிசீலனையில் உள்ளன.
மன ஆரோக்கியம்
அரசு துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு, ஆரோக்கியமான குழந்தைகள் என்ற பெயரில் மற்றொரு திட்டம் செயல்படுத்தப்படும். குழந்தைகளை விளையாட்டுகளில் ஈடுபடுத்துவதன் வாயிலாக, அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம்.
மேலும், ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில், 37.80 கோடி ரூபாய் செலவில், கேரளாவின் 14 மாவட்டங்களிலும் மாதிரி ஆட்டிசம் வளாகங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.