துணைவேந்தர் நியமனத்தால் கேரள கவர்னர் - முதல்வர் மோதல்
துணைவேந்தர் நியமனத்தால் கேரள கவர்னர் - முதல்வர் மோதல்
UPDATED : ஆக 02, 2025 12:00 AM
ADDED : ஆக 02, 2025 11:03 AM
திருவனந்தபுரம்:
கேரளாவில், இரு பல்கலைகளுக்கான துணைவேந்தர்களை அந்த மாநில கவர்னர் ராஜேந்திர அர்லேகர் நியமித்த நிலையில், அந்த நியமனத்தை ரத்து செய்யும்படி முதல்வர் பினராயி விஜயன் அவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடதுசாரி கூட்டணி முன்னணி ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள கேரள டிஜிட்டல் அறிவியல் பல்கலையின் துணைவேந்தராக சிசா தாமஸையும், ஏ.பி.ஜே., அப்துல்கலாம் தொழில்நுட்ப பல்கலையின் துணைவேந்தராக கே. சிவபிரசாதையும் நியமனம் செய்து கடந்த ஆண்டு நவம்பரில் கவர்னராக இருந்த ஆரிப் முஹமது கான் ஆணையிட்டார்.
இது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இந்த விவகாரத்தில், கேரள அரசும், கவர்னரும் ஒருங்கிணைந்து முடிவெடுக்க வேண்டும் என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, சிசா தாமஸ், சிவபிரசாத் ஆகியோரை இடைக்கால துணைவேந்தர்களாக நியமிக்க தற்போதைய கவர்னர் ராஜேந்திர அர்லேகர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி, முதல்வர் பினராயி விஜயன், கவர்னருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், உச்ச நீதிமன்ற உத்தரவில், துணைவேந்தர்கள் நியமனத்தில் கேரள அரசுடன் கவர்னர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ஆனால், எந்தவித ஆலோசனையும் செய்யாமல், தன்னிச்சையாக அறிவிக்கப்பட்ட துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பாக, மாநில உயர்க்கல்வி அமைச்சர்கள் நேரில் சந்தித்து பேசுவர் என, கூறப்பட்டுள்ளதாக முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

