கடிதம் எழுதிய கேரள பள்ளி மாணவன்; நெகிழ்ந்து போன இந்திய ராணுவம்!
கடிதம் எழுதிய கேரள பள்ளி மாணவன்; நெகிழ்ந்து போன இந்திய ராணுவம்!
UPDATED : ஆக 05, 2024 12:00 AM
ADDED : ஆக 05, 2024 05:12 PM
கேரளா:
வயநாட்டில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்களுக்கு கேரளாவைச் சேர்ந்த 3ம் வகுப்பு படிக்கும் மாணவன் எழுதிய கடிதம் நெகிழச் செய்துள்ளது.
பலி அதிகரிப்பு
அண்மையில் பெய்த கனமழையினால் வயநாட்டில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. சூரல்மலை, முண்டக்கை கிராமங்கள் மண்ணோடு மண்ணாகின. இதுவரை 361 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 200 பேரை காணவில்லை.
இந்திய ராணுவம்
மீட்பு, நிவாரணப் பணிகளில் இந்திய ராணுவத்தினர் மற்றும் மீட்புப் படையினர் தொடர்ந்து 6வது நாளாக ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கியவர்கள், காட்டுப்பகுதிகளில் தஞ்சம் புகுந்தவர்கள் என அனைவரையும், பெரும் போராட்டத்திற்கு பிறகு மீட்கும் இந்திய ராணுவத்தினரின் செயல்கள் பாராட்டுக்குள்ளாகி வருகிறது.
மாணவன் கடிதம்
குறிப்பாக, நிலச்சரிவு ஏற்பட்ட உடனே சம்பவ இடத்திற்குச் சென்ற இந்திய ராணுவத்தினர், சூரல்மலை மற்றும் முண்டக்கை கிராமத்திற்குச் செல்ல, 190 அடியில் இரும்பாலான தற்காலிக பாலத்தை விரைந்து கட்டி முடித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்த நிலையில், இந்திய ராணுவத்தை பாராட்டி கேரளாவைச் சேர்ந்த 3ம் வகுப்பு படிக்கும் மாணவன் ராயன் எழுதிய கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நானும் ஆவேன்
அந்தக் கடிதத்தில் அன்புள்ள இந்திய ராணுவ வீரர்களே, நிலச்சரிவால் நிலைகுலைந்து போன எங்களின் வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களை, நீங்கள் மீட்கும் பணிகளைப் பார்க்கும் போது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உங்களின் பசிக்கு வெறும் பிஸ்கட்டை மட்டும் சாப்பிட்டு விட்டு, அந்தப் பாலத்தை நீங்கள் கட்டிய வீடியோவை பார்த்தேன். இவை அனைத்தும் என்னை இந்திய ராணுவத்தில் ஒருநாள் இணைத்து நாட்டுக்காக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கியுள்ளது, எனக் குறிப்பிட்டிருந்தான்.
நன்றி, இளம் வீரனே
அவனது இந்தக் கடிதத்திற்கு பதிலளித்த இந்திய ராணுவத்தினர், நீங்கள் இந்திய ராணுவத்தின் சீருடையை அணிந்து எங்களுடன் சேர்ந்து நாட்டுக்காக பணியாற்றுவதை பார்க்க ஆவலுடன் இருக்கிறோம். நன்றி, இளம் வீரனே எனக் கூறியுள்ளனர்.