UPDATED : செப் 23, 2024 12:00 AM
ADDED : செப் 23, 2024 04:14 PM

வேலை வாய்ப்பை எளிதாக்கும் வகையில் தொழிற்பயிற்சியை வழங்குவதை பிரதான நோக்கமாக கொண்டு, 'நேஷனல் அப்ரண்டிஸ்ஷிப் பிரமோஷன் ஸ்கீம் - நாப்ஸ்' எனும் தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்புத் திட்டம் 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இத்திட்டத்தை தொடர்ந்து, மத்திய அரசால் 100 சதவீதம் நிதியளிக்கப்படும் 'நாப்ஸ் - 2' திட்டம், 'திறன் இந்தியா'வின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ளது.
நோக்கங்கள்
* வேலை அனுபவ பயிற்சியை ஊக்குவிப்பதன் வாயிலாக திறமையான பணியாளர்களை உருவாக்குதல்
* தொழில் நிறுவனங்களால், பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை மத்திய அரசு பகிர்ந்துகொள்வதன் வாயிலாக, அதிகமானோருக்கு பயிற்சி அளிக்க நிறுவனங்களுக்கு ஊக்கம் அளித்தல்
* மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு முயற்சிகளால் வழங்கப்படும் குறுகிய கால திறன் பயிற்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு திறன் வாய்ப்புகளை வழங்குதல்.
* குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் - எம்.எஸ்.எம்.இ.,களில் பயிற்சி திட்டத்தை அமல்படுத்துவதோடு, பின்தங்கிய பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு பயிற்சி அளித்தல்.
பயிற்சி திட்டங்கள்
* ஐ.டி.ஐ., எனும் தொழில்துறை பயிற்சி நிறுவனங்களில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஓர் ஆண்டு பயிற்சி
* ஐ.டி.ஐ., தேர்ச்சி பெறாதவர்களுக்கு அப்ரண்டிஸ்ஷிப் பயிற்சியின் காலம் பொதுவாக இரண்டு ஆண்டுகள்
* தொழில்துறையினரால் தீர்மானிக்கப்படும் தொழிற்கல்வி படிப்பு
* அடிப்படை பயிற்சியின் காலம் 6, 9 மற்றும் 12 மாதங்கள் என பயிற்சி திட்டத்தின் அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ளன. சில சந்தர்ப்பங்களில், எம்.எஸ்.டி.இ.,யின் ஒப்புதலுக்கு உட்பட்டு, கால அளவு ஓர் ஆண்டிற்கு மேற்பட்டும் இருக்கலாம்.
உதவித்தொகை
ஒரு பயிற்சியாளருக்கு மாதம் 9 ஆயிரம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. தொழிற்பயிற்சி உதவித்தொகையில் 25 சதவீத தொகையை மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறது.
துறைகள்
உற்பத்தி, விவசாயம் மற்றும் அது சார்ந்த சேவைகள், வங்கி நிதி சேவை மற்றும் காப்பீடு, ரசாயனம், கற்கள் மற்றும் நகைகள் வடிவமைப்பு, தொழில்துறை ஆட்டோமேஷன் மற்றும் கருவிகள், கடல்சார் தொழில்கள், திறன்கள் மற்றும் தொழில்முனைவு ஆகிய துறைகள் இத்திட்டத்தின் கீழ் செயல்படுகின்றன. தொழில்துறை பயிற்சி மேற்கொள்ள விரும்பும் பயிற்சியாளர்கள் இவற்றில் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை
https://www.apprenticeshipindia.gov.in/candidate-login என்ற இணைய பக்கம் வாயிலாக ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். அதார், கல்விச்சான்று உள்ளிட்ட ஆவணங்கள் பதிவேற்றுவதுடன் பயிற்சி பெற விருப்பமான துறையை தேர்ந்தெடுக்க வேண்டும்.
விபரங்களுக்கு:
https://www.apprenticeshipindia.gov.in/