குமரி கல்லுாரி 100 எம்.பி.பி.எஸ்., இடங்களை திரும்ப பெற்றது ஆணையம்
குமரி கல்லுாரி 100 எம்.பி.பி.எஸ்., இடங்களை திரும்ப பெற்றது ஆணையம்
UPDATED : ஆக 31, 2024 12:00 AM
ADDED : ஆக 31, 2024 03:35 PM
சென்னை:
கன்னியாகுமரி மருத்துவ மிஷன் ஆராய்ச்சி மைய கல்லுாரிக்கு அனுமதிக்கப்பட்ட, 100 எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை இடங்கள் திரும்ப பெறப்பட்டன.
அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களுக்கான இணையவழி பொது கவுன்சிலிங், 21ம் தேதி துவங்கியது. அரசு ஒதுக்கீடு தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற, 28,819 பேரும், நிர்வாக ஒதுக்கீடு தரவரிசையில் இடம்பெற்ற 13,417 பேரும், விருப்பமான கல்லுாரிகளை தேர்வு செய்வது, 27ம் தேதியுடன் முடிவடைந்தது.
இதில் தற்காலிக ஒதுக்கீடு இடங்கள் பட்டியல், நேற்று முன்தினம் வெளியிட்டப்பட்டு, இறுதி கட்ட ஒதுக்கீடு நேற்று வெளியாவதாக இருந்தது. இந்நிலையில், தேசிய மருத்துவ ஆணையத்தின் கடிதம், மாநில மருத்துவ கல்வி இயக்ககத்துக்கு நேற்று கிடைத்தது.
கன்னியாகுமரி மருத்துவ மிஷன் ஆராய்ச்சி மைய கல்லுாரி இடத்திற்கு உரிமை கோரி ஒருவர், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதனால், அக்கல்லுாரிக்கு அனுமதிக்கப்பட்ட 100 எம்.பி.பி.எஸ்., இடங்கள் திரும்ப பெறப்படுகின்றன. அங்கு மாணவர் சேர்க்கை நடத்த வேண்டாம் என, அதில் ஆணையம் தெரிவித்துஇருந்தது.
தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவுறுத்தலால், 100 இடங்கள் திரும்ப பெறப்பட்டு, புதிய இறுதி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதேநேரம், அந்த கல்லுாரியில் சீட் ஒதுக்கீடு பெற்ற அரசு பள்ளி மாணவர்கள், ஐந்து பேருக்கு, வேறு கல்லுாரிகளில் இடங்கள் வழங்கப்பட உள்ளன.